31

கூறுவாராய்,    “ஆன்றவிந்  தடங்கிய செயிர்தீர் செம்மால்” எனவும்,
“துளங்குகுடி   திருத்திய   வலம்படு  வென்றியும்,”   “தொன்னிலைச்
சிறப்பின்   நின்னிலை   வாழ்நர்க்குக்,   கோடற்  வைத்த  கோடாக்
கொள்கையும்”   உடையனெனவும்,  “தாவி  னெஞ்சத்துப்,  பாத்தூண்
தொகுத்த   ஆண்மை”   யுடையனெனவும்  பலவகையாற்  பாராட்டி,
அவன்  மனைவியின்  மாண்பினை,  “விசும்பு வழங்கு  மகளிருள்ளும்
சிறந்த,   செம்மீன்   அனையள்”   என  எடுத்தோதி,  அவனுடைய
வென்றிச்      சிறப்பும்       கொடைச்சிறப்பும்      நவில்தொறும்
இன்பஞ்சுரக்கப்பாடி,     “உலகத்தோரே     பலர்மன்     செல்வர்,
எல்லாருள்ளும்  நின் நல்லிசை மிகுமே” என்றும், அவன்  தனக்கென
வாழாப்   பெருந்தகையாதலை  மிக  வியந்து,  “தாவில்  நெஞ்சத்துப்
பகுத்தூண்  தொகுத்த ஆண்மைப், பிறர்க்கென வாழ்தி நீ”  யெனவும்,
“நன்று   பெரிதுடையையால்   நீயே,   வெந்திறல்   வேந்தே   யிவ்
வுலகத்தோர்க்கே” யெனவும் பாராட்டிக் கூறுவன பன்முறையும் படித்து
இன்புறத்  தகுவனவாகும்.  சேரநாட்டவர்  திருமாலை வழிபடுந் திறம்
இவரால் மிக்க விளக்கமாகக் குறிக்கப்படுகிறது.
  

பரணர் :  ஆசிரியர்  பரணர்  சங்ககாலச்  சான்றோர் கூட்டத்துட்
சிறப்புடையோருள்  ஒருவர். இவர் பாடிய பாட்டுக்கள் மிகப் பல சங்க
இலக்கியங்களுள்   தொகுக்கப்பட்டுள்ளன.   ஆசிரியர்   மாமூலனார்
முதலிய  சான்றோர்  போலத்  தம் காலத்தும் தம்முடைய முன்னோர்
காலத்தும்   நிகழ்ந்த   நிகழ்ச்சிகளை  ஆங்காங்கு  எடுத்துக்காட்டிப்
பண்டைத்   தமிழ்நாட்டு  வரலாற்றறிவு  வழங்கும்  பெருந்தகை  இப்
பரணராவர்.  இவருடைய புலமை நலமும் வளமும் ஈண்டுக் கூறலுறின்,
அதுவே   ஒரு   செவ்விய   நூலாகும்  பெருமையுடையதாகும்.  இந்
நூலின்கண்     இவர்     கடல்பிறக்கோட்டிய      செங்குட்டுவனை
ஐந்தாம்பத்தாற்   பாடிச்   சிறப்பித்துள்ளார்.   இதன்  பதிகம்,   இச்
செங்குட்டுவனே  வடவரை வென்று கண்ணகியாருக்குக் கற்கொணர்ந்த
சேரன்    செங்குட்டுவன்   என்று   கூறுகிறது;   இப்   பத்தின்கண்
அச்செய்தியொன்றும் குறிக்கப்படாமை கொண்டு, திரு. கா. சு. பிள்ளை
முதலியோர்,  இக்  கடல்பிறக்கோட்டிய  செங்குட்டுவன் சிலப்பதிகாரச்
செங்குட்டுவனுக்கு   முன்னோனாவன்   என்பர்.   இவன்  காலத்தே
மேனாட்டவரான      யவனரும்       பிறரும்      கடல்வழியாகக்
கலஞ்செலுத்திப்போந்து     கடற்குறும்புசெய்து    வந்தாராக,    இச்
செங்குட்டுவன்  வேலேந்திய  வீரர்  பலருடன்  கடற்படை  கொண்டு
கலத்திற்சென்று,  கடற்குறும்பு  செய்த பகைவரனைவரையும் வேரோடு
கெடுத்து  வென்று  சிறந்தான்.  அதனால் இவன் கடல்பிறக் கோட்டிய
செங்குட்டுவன் எனப்படுவானாயினன். இதனைப் பரணர், நேரிற்கண்டு