பக்கம் எண் :

312

பாடு    மிடத்து  அவர்தம் சிறப்புக்கு ஆக்கமாகும் கற்புடைய அவர்
மனைவியையும்  ார்த்திப்  பாடுதல் பண்டையோர் மரபு ; “மடமகளிர்
தாம்   பிழையார் கேள்வர்த்   தொழுதெழலாற்  றம்மையரும்,  தாம்
பிழையார் தாந் தொடுத்த கோல்” (கலி.39) என்பதனால், மகளிர் கற்பு
கணவர்க்கும் தமர்க்கும் ஆக்கமாதல் காண்க.

3 - 6. இன்னிசை................................பொருந .

உரை : இன்னிசைப் புணரி இரங்கும் -   இனிய ஓசையையுடைய
அலைகள் ஒலிக்கின்ற ; பௌவத்து - கடல் வழியாக வந்த ; நன் கல
வெறுக்கை   -  நல்ல  கலன்களாகிய  செல்வம்  ;  துஞ்சும்  பந்தர்
தொகுக்கப்  பட்டிருக்கும்  பண்ட  சாலைகள் உள்ள ; தாழை கமழும்
கானல்  அம்  பெருந்  துறை  -  தாழையின்  மணம் கமழும் கானற்
சோலை  நிற்கும் பெருந்  துறையையுடைய  ;  தண்  கடற் படப்பை
தண்ணிய கடற்கரைப்  பகுதியாகிய  ;  நன்னாட்டுப் பொருந - நல்ல
நாட்டுக்குத் தலைவனே எ - று.

புணரி, அலை . ஒரே வகையாக இடையறாத முழக்கத்தைச் செய்து
கொண்டே  யிருத்தல் பற்றி, “இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவம்”
எனப்பட்டது.  இக்  கடல் வழியாக வேறு நாடுகளிலிருந்து கலங்களில்
சீரிய   பொன்னும்   மணியும்  முதலிய  கலன்கள்  கொணரப்படுதல்
தோன்ற,  “பௌவத்து  நன்கல  வெறுக்கை”  யென்றார்.  வெறுக்கை,
செல்வம்  . நன்கலத்தின்  மிகுதி  தோன்ற  “வெறுக்கை”  யென்பது
நிற்றல்  காண்க  .  வெறுத்தல்  மிகுதிப்பொருட்டாதலை,  “வெறுத்த
கேள்வி”   (புறம்.   53)  என்பதனா  லறிக  .  இனிப்  பழையவுரை,
“பௌவத்து   நன்கல   வெறுக்கை  யென்றது  பௌவத்திலே  வந்த
நன்கலமாகிய  வெறுக்கை  யென்றவா” றென்றும், “நன்கல வெறுக்கை
துஞ்சு   மென்ற  சிறப்பானே   இதற்குத்   துஞ்சும்  பந்தர்  என்று
பெயராயிற்”றென்றும்   கூறுவர்.  பந்தர்,  பண்டசாலை  (Godowns).
பெருந்துறை  யிடத்தே  கானற்சோலை  யுண்மை  தோன்ற, “கானலம்
பெருந்துறை”  யென்றார். படப்பை, சார்ந்துள்ள நிலப்பகுதி . மனைப்
படப்பை,   காவிரிப்    படப்பை  என  வரும்  வழக்காறு  காண்க.
பொருவிறந்தானைப்   “பொருந”   என்றார்.   முருக    வேளையும்
“போர்மிகு பொருந” (முருகு. 276) என்று நக்கீரர் கூறுவர்.

7 - 9. செவ்வூன் ........................ அண்ணல் .

உரை :  செவ்வூன் தோன்றா - தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி
தோன்றாதவாறு   செய்த;   முதிரை  வெண்  துவை  - துவரையால்
அரைக்கப்பட்ட  வெள்ளிய  துவையலையும்;  வால்  ஊன்  வல்சி -
வெண்மையான  வூன்கலந்  தமைத்த சோற்றையு முண்ணும் ; மழவர்
மெய்ம்மறை  -  மழவருக்கு மெய்புகு கவசம் போன்றவனே ; குடவர்
கோவே  -  குடநாட்டவர்க்குத் தலைவனே; கொடித்தேர் அண்ணல் -
கொடிகட்டிய தேரையுடைய அண்ணலே எ - று.