செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையாதலால் “வெண்டுவை” யென்றும், சிவந்த வூனாயி்னும் அத் துவையில் தன் செம்மை தோன்றா தாயினமையின் “செவ்வூன் தோன்றா” வென்றும் கூறினார். பழைய வுரைகாரரும், “செவ்வூன் தோன்றா வெண்டுவை யென்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை யென்றவா” றென்றே கூறுவர் . முதிரை துவரை அவரை முதலாயின. வாலூன் என்றது வெள்ளிய நிணமிக்க வூனாயிற்று. துவையிலும் வல்சியிலும் ஊனே மிகுந்து நிற்றலால், இம் மழவர் சோற்றினும் ஊனே பெரி துண்ப ரென்பது பெறப்படும் வல்சி மழவ ரென்றது “தம் செல்வச் செருக்கானே சோறுண்பது பெரிதன்றி முன்பு எண்ணப்பட்டவற்றையே யுணவாகவுடைய வீர ரென்றவா றெனப்” பழையவுரை கூறும். மெய்ம்மறை, இதற்குச் “சான்றோர் மெய்ம்மறை” யென்புழிக் (பதிற். 14) கூறினாம். மழவர், ஒருவகை வீரர் ; “உருவக் குதிரை மழவர் ஓட்டிய” (அகம். 1) என்று வருதல் காண்க. இவர் வாழும் நாடு, மழநாடு எனப்படும். திருச்சிராப்பள்ளி மாநாட்டுக் காவிரியின் வடகரைப்பகுதி மழநாடாகும். வடநாட்டவரை வடவர் என்பதுபோலக் குடநாட்டவர், குடவரெனப் பட்டனர். 10 - 12. வாராராயினும்..........................தோன்றல். உரை : இரவலர் வாராராயினும்- நாட்டில் இரவலர் இல்லாமையால் இரப்பவர் வாரா தொழியினும் ; வேண்டி - அவர்க்கு ஈத்துவக்கும் இன்பம் விரும்பி ; தேரின் தந்து - பிற நாடுகளிலிருக்கும் இரவலரைத் தேரேற்றிக் கொணர்ந்து; ஆர் பதன் நல்கும் - உண்ணும் உணவு மிகக் கொடுக்கும் ; நசை சால் வாய் மொழி - கேட்டார்ப்பிணிக்கும் வாய்மைமொழியினையுடைய ; இசை சால் தோன்றல் - புகழமைந்த தோன்றலே எ - று . “வாராராயினும்” என்றும், “தேரிற்றந்து” என்றும் கூறியதனால், நாட்டில் இரவலர் இன்மை பெற்றாம். அவ் விரவலர்க் கீத்துவக்கும் இன்பம் பெறல் வேண்டி அவரைத் தானே வலிய வருவித்தா னென்பார், “இரவலர் வேண்டித் தேரிற் றந்து” என்றார். இனிப் பழையவுரைகாரர், “இரவலரை யென்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது” என்றும், “இரவலரை வேண்டி யென்றது தன்னாட்டு இரவல ரில்லாமையான் அவரைப் பெற விரும்பி யென்றவா” றென்றும் கூறுவர் . எனவே, தன்னாட்டில் வறுமை யின்மையால் இரவலர் வாராராயினும் பிறர் நாட்டில் வறுமை யுண்மையால் இரவல ருண்மை தெரிந்து அவரைப் பெற விரும்பினானென்பதே கருத்தாயிற்று . தேரிற்றந் தென்றதனால், இவனால் விரும்பிக் கொணரப்பட்ட இரவலர் புலவரும் பாணரும் கூத்தரும் பொருநருமாதல் பெறப்படும் ; இவர் கட்கு அரசர் தேர் முதலிய ஈதல் இயல்பாதலின், “பாணர் வருக பாட்டியர் வருக, யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென, இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம், கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடு வீசி” (மதுரை : 749 - 52) என்று பிறரும் கூறுதல் காண்க. இனித் தேரிற்றந் தென்றதற்குப் பழையவுரைகாரரும், “அவ் விரவலருக்கு அவருள்வழித் தேரைப் போகவிட்டு அதிலே அவர்களை வரப்பண்ணி” யென்றும். “தேரா னென |