வுருபு விரிக்க” வென்றும் கூறி, “தேர்எனத் தேர்ச்சியாக்கி அவ் விரவலரை அவருள்ள விடத்தில் தேடி அழைத்தென்றவா” றென்றும் கூறுவர். ஆர்பதனல்கும் தோன்றல், வாய்மொழித் தோன்றல், இசைசால் தோன்றல் என இயைக்க. வாய்மை, கேட்டார்க்கினிமையும் நற்பயப்பாடும் உடைமையின், அதனை “நசைசால் வாய்மொழி” யென்றார். நசையை மொழிக்கேற்றினு மமையும். இசை, ஈதல்மே னிற்பதாகலின், அதனை மிகவுடைய னாதலின், “இசைசால் தோன்றல்” என்பாராயினர். 13 - 21. வேண்டுவ...............நாளே. உரை : பெரும - பெருமானே ; நனந்தலை வேந்தர் - அகன்ற இடத்தையுடையவேந்தர் ; அல்கலும்தார் அழிந்து அலற - நாடோறும் தமது தூசிப்படை கெடுதலால் ஆற்றாது புலம்ப ; நீடு வரை அடுக்கத்த நாடு - நெடிய மலைப்பக்கத்தைச் சார்ந்த அவர் நாடுகளை ; கைக் கொண்டு - கைப்பற்றி ; பொருது சினம் தணிந்த - அவரைப் பொருது தொலைத்து அவர்பாலெழுந்த சினம் தணியப்பெற்ற; செருப் புகல் ஆண்மை - போரை விரும்பும் ஆண்மையினையும் ; தாங்குநர்த் தகைத்த ஒள்வாள் - எதி்ரூன்றித் தடுக்கும் பகைவரை யழித்த ஒள்ளிய வாளையும் ; ஓங்கல் உள்ளத்து - உயர்ந்தவூக்கத்தையு முடைய ; குருசில் - குருசிலே ; நின் நாள் - நின்னுடைய வாணாள் ; வேண்டுவ அளவையுள் - வேண்டிய கால வளவினுள் ; யாண்டு பல கழிய - யாண்டுகள் பல செல்ல ; பெய்து - மழையைப் பெய்து ; புறந் தந்து - உயிர்களைக் காப்பாற்றி ; பொங்கல் ஆடி - மேலோங்கிப் பறக்கும் பிசிராய்க் கழிந்து ; விண்டுச் சேர்ந்த வெண் மழை போல - மலையுச்சியையடைந்த வெள்ளிய முகிலைப்போல ; சென்றறாலியர் - சென்று கெடா தொழிவதாக எ-று. பெரும, குருசில், நின் நாள் யாண்டு பல கழிய, வெண் மழை போலச் சென்றறாலியர் என முடிக்க. ஆண்மையும், வாளும், உள்ளமும் உடைய குருசில் என இயையும். பேரிடத்தை யுடையராதலின், பொர வாற்றாது வலியழிந்தன ரெனத் தாம் கூறுவதை வலியுறுத்தற்கு, “நனந்தலை வேந்தர்”என்றும், அவர் விடுத்த தூசிப்படை நாடோறுந் தோற்றழிவது கண்டு வாய்விட்டலறின ரென்றற்கு, “அல்கலும் தாரழிந் தலற” என்றும் கூறினார். ஒருநாள் தாரழிந்ததற்கு வழி நாள் பலவும் அலற என்றற்கேற்ப, தாரழிந்து அல்கலும் அலற என இயைப்பினுமாம். பழையவுரைகாரர், “அல்கலும் நாடு கைக்கொண்டு” எனக் கூட்டி முடிப்பர். பகைவர் நாடு மலைப்பக்கத்து நாடென்பார், “நீடுவரை யடுக்கத்த நாடு” என்றார். பொருது வேறலால் சினம் தணியினும் போர்வேட்கை யொழியாது நிலைபெறுதலின், “பொருது சினந் தணிந்த” என்றவர் இடையீடின்றிச் “செருப்புகலாண்மை” யினை எடுத்தோதினார். ஓங்குதற்குக் காரணமாகிய உள்ளத்தை ஓங்கலுள்ளமென்றார் ; “மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு” (குறள். 595) என்று சான்றோர் கூறுதல் காண்க. படைப்புக்காலத்தே அவரவர்க்கு வரையப்பட்ட கால வெல்லையை “வேண்டுவ வளவை” யென்றார். |