துறை : விறலியாற்றுப்படை வண்ணமும் தூக்கும் அது. பெயர் : சில்வளை விறலி. 5- 6. மெல்லிய.............விறலி. உரை : சில் வளை விறலி - சிலவாகிய வளைகளை யணிந்த விறலியே; மெல்லிய வகுந்தில் - மென்மையான நிலத்திடத்தவாகிய வழியிலே ; சீறடி ஒதுங்கிச் செல்லாமோ - சிறிய காலடிகளால் நடந்து செல்வேம் வருதியோ எ - று. ஆடற்றுறைக் குரியளாதல் தோன்ற, “சில்வளை விறலி” யென்றார். “பல்வளை யிடுவது பெதும்பைப் பருவத்தாகலின், அஃதன்றிச் சில் வளையிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக் குரியளாதல் கூறியவாறு” என்றும், “இச் சிறப்பானே இதற்குச் சில்வளை விறலியென்னும் பெயராயிற்” றென்றும் பழையவுரை கூறுகின்றது. “இன்புளி வெஞ்சோறு, தேமா மேனிச் சில்வளை யாயமொடு, ஆமான் சூட்டினமைவரப் பெறுகுவிர் (சிறுபாண். 175-7) என்புழியும் விறலிக்குச் சில்வளையே கூறுமாறு காண்க. மெல்லிய வகுந்தில் என்பது பரலும் முள்ளுமின்றிச் செல்லும்வழி. செம்மையும் மென்மையும் உடைத்தாதல் தோன்றநின்றது. வகுந்து, வழி ; வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்க” (சிலப். 14 : 17) என்று சான்றோர் கூறுதல் காண்க. செல்லாமோ என்புழி ஓகாரம் எதிர்மறை ; இது செல்லாம் என்னும் மறை வினையோடு புணர்ந்து உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்திச் செல்வோம் வருக என்னும் பொருள்பட நின்றது. செல்வாமோ என்பது செல்லாமோ என மருவி முடிந்தது என்றும் கூறுப. தில் ; விழை வின்கண் வந்தது. 6 - 15. பாணர் கையது .................வரற்கே. உரை : இளம் துணைப் புதல்வர் நல்வளம் பயந்த - இளமையும் துணையாகும் தன்மையுமுடைய மக்களாகிய நல்ல செல்வத்தைப் பெற்றளித்த ; வளம்கெழு குடைச்சூல் - வளமை பொருந்திய சிலம்பையும் ; அடங்கிய கொள்கை - அடக்கத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் ; ஆன்ற அறிவின் - நிறைந்த அறிவையும் ; தோன்றிய நல்லிசை - குணஞ் செயல்களால் உண்டாகிய கெடாத புகழையுமுடைய ; ஒண்ணுதல் மகளிர் ஒள்ளிய நுதலினராகிய காதல் மகளிர் ; துனித்த கண்ணினும் - புலவியாற் சீறி நோக்கும் பார்வையினும் ; இரவலர் புன்கண் அஞ்சும் - இரவலர் குறையிரந்து பசித்துன்பம் தோன்ற நோக்கும் பார்வை கண்டு மிக அஞ்சுகின்ற; புரவெதிர் கொள்வனை - நம்மைப் பாதுகாத்தலை மேற்கொண் |