பக்கம் எண் :

319

டொழுகுவோனாகிய     சேரமானை ; பாணர்    கையது - பாணரது
கையிடத்தேயுள்ளதாகிய;  பணிதொடர்  நரம்பின்  -  தாழக்கட்கூடிய
நரம்பினை  ;  விரல்  கவர்  - கை விரலால் வாசித்தலை விரும்பும் ;
பேர்  யாழ்  - பேரியாழின்கண் ; பாலை பண்ணி - பாலைப்பண்ணை
யெழுப்பி  ;  குரல்  புணர்  இன்  இசை  - குரலென்னும் நரம்பொடு
புணர்த்த இனிய இசையில் ; தழிஞ்சி பாடி - தழிஞ்சியென்னும் துறை
பொருளாக அமைந்த பாட்டினைப் பாடிச் சென்று ; கண்டனம் வரற்கு
- கண்டு வருதற்குச் செல்வோம், வருதியோ எ - று.

பாணர்     கையது பேரியாழ் நரம்பின் விரல்கவர் பேரியாழ் என
இயையும்.  நரம்பினை  இறுக்கும்  முறுக்காணி  கோட்டின் பக்கத்தே
தாழவிருத்தலின்,  அதனோடு தொடர்படுத்திப் பிணித்திருக்கும் இசை
நரம்பை,  “பணி  தொடர்  நரம்” பென்றார். பணியா மரபினையுடைய
எத்தகையோரையும்  தன்பாலெழும்  இசையாற் பணிவிக்கும் சிறப்புப்
பற்றி  இவ்வாறு  கூறினா  ரெனினுமாம் ; “ஆறலை கள்வர் படைவிட
அருளின், மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை” (பொருந. 21 - 22)
என்று  சான்றோர்  கூறுதல்  காண்க. கவர்தல், விரும்புதல் ; “கவர்வு
விருப்பாகும்”  என்பது  தொல்காப்பியம்.  கைவிரல்களாற்  பலகாலும்
வாசித்துப்   பயின்ற  யாழாதல்  தோன்ற,  “விரல்  கவர்  பேரியாழ்”
எனப்பட்டது.   “விரல்   கவர்  யாழென்றதனாற்  பயன்,  வாசித்துக்
கைவந்த  யாழ்  என்றவாறு” என்று பழையவுரையும் கூறுதல் காண்க.
பேரியாழ், யாழ்வகையுள் ஒன்று. கோல் தொடுத் திசைப்பனவும், விரல்
தொடுத்  திசைப்பனவும்  என  இப் பேரியாழ் வகை கூறப்படுகின்றது.
கோல்  தொடுத்  திசைப்பனவற்றுள்  ஆயிரம் நரம்பு பெற்று ஆயிரம்
கோல்  தொடுத்து  இசைப்பனவும்  பண்டைநாளில் இருந்தன வென்று
சிலப்பதிகாரம்  பழையவுரை  கூறுகிறது  ; (அடி நல். உரைப்பாயிரம்)
இப்  பேரியாழ்  வகையின் நீக்குதற்கு, “விரல் கவர் பேரியாழ்” எனச்
சிறப்பித்தாரென்றுணர்க.   குரலென்னும்   நரம்பிசையினை   ஆதார
சுருதியாகப் புணர்ந்து பாலைப்பண் வகை பலவும் பாடப்படுதல் பற்றி,
“குரல்   புணர்   இன்னிசை”  யென்றார்.  இப்  பாலைவகையினைச்
சிலப்பதிகார  அரங்கேற்று காதையுரையிற் காண்க. இனி, குரலென்றது
மிடற்றோசை யென்று கொள்வாருமுளர்.

தழிஞ்சியாவது     போரில் அழிந்தார்பால் கண்ணோடிச் செய்வன
செய்தல்.     இது     பொருளாகப்    பாடும்    இசைப்பாட்டையும்
தழிஞ்சியென்றார்.  “தொடைபடு  பேரியாழ் பாலை பண்ணிப், பணியா
மரபின்   உழிஞை   பாட”   (பதிற்.   46)  என்று  உழிஞைப்பாட்டு
இசைக்கப்படுமாறும்  காண்க.  தழிஞ்சி பாடி, கண்டனம் வரற்கே என
இயையும். சென்றென ஒரு சொல் வருவித்துக் கொள்க.

இம்மையிற்  புகழும் மறுமையிற் பேரின்பமும் பயக்கும் பெறலரும்
பேறாதலின்,  மக்கட்  பேற்றினை,  “நல்  வளம்” என்றும், அதனைத்
தெரித்துமொழி கிளவியாற் கூறுவார், “இளந்துணைப் புதல்வர் நல்வள”
மென்றும்  கூறினார்.  புதல்வராகிய நல்வள மென்க. “இம்மை யுலகத்
திசையொடும்   விளங்கி,   மறுமை   யுலகமும்  மறுவின்  றெய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சி, சிறுவர்ப் பயந்த செம்மலோர்”
(அகம். 66) எனச்