சான்றோர் கூறுதல் காண்க. மக்களைப் பயத்தல் கணவர்க்கு உவகை தருவதொன்றாதல் பற்றி, மகளிரை, “இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த மகளிர்” என்றார். “கணவ னுவப்பப் புதல்வர்ப் பயந்து” (மதுரை. 600) என்று மாங்குடி மருதனார் கூறுவர். குடைச்சூல், சிலம்பு ; புடைபட்டு உட்கருவையுடைத்தாதல் பற்றி, சிலம்பு குடைக்சூ லெனப்பட்டது ; “பத்திக்கேவணப் பசும்பொற் குடைச்சூல், சித்திரச் சிலம்பு” (சிலப். 16 : 118-9) என்பதன் உரை காண்க. வளங்கெழு குடைச்சூல் என்புழி, வளம் பொன்னினும் மணியினும் தொழிற் சிறப்பமையச் செய்த சிறப்பு. மன மொழிமெய்களால் அடங்கிய ஒழுக்கமுடைமை தோன்ற, “அடங்கிய கொள்கை” யென்றார். உடையாரது அடக்கம் அவருடைய ஒழுக்கத்தின் மேலேற்றப்பட்டது. அரச மகளிர்க்குக் கல்வியறியும் இன்றியமையாதெனக் கருதினமையின், “ஆன்ற அறிவின்” என்றார். “அறிவும் அருமையும் பெண்பாலான” (பொ. 209) என்று ஆசிரியர் ஓதுவது காண்க. இல்வாழ்வின் முடிபொருள் நல்லிசை நிலைபெறுவித்தலெனக் கருதி யொழுகுவது அவ் வாழ்க்கைத் துணையாம் மகளிர் கடமையாதலை யுணர்ந்து அறஞ்செய்து புகழ் மிகுத்தல் பற்றி, “தோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர்” என்றார். “புகழ்புரிந் தில்லிலோர்க்கில்லை” (குறள். 59) என்பதனால், புகழ்புரிதல் மனைமகளிர் கடமையாத லறிக. துனித்தல், உணர்ப்புவயின் வாரா வூடல் மிகுதி. துனித்த வழிக் காமவின்பம் சிறவாமையின், மகளிர் துனிக்கு ஆடவர் அஞ்சுவரென வறிக ; “இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே, துனி செய்து துவ்வாய்காண் மற்று” (குறள். 1294) எனச் சான்றோர் கூறுமாற்றானறிக. இல்லிருந்து செய்யும் நல்லறப் பயனாக நுகரும் காதலின்பத்தினும், அவ்வறப் பயனாக எய்தும் ஈதலின்பத்தையே பெரிதாகக் கருதுமாறு தோன்ற, “மகளிர் துனித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவெதிர் கொள்வன்” என்றார். செல்வத்துப் பயனும் இதுவே யென்பதுபற்றி, இரவலர் புன்கண் கண்டு அஞ்சுதலை விதந்தோதினார் ; “சேர்ந்தோர், புன்க ணஞ்சும் பண்பின், மென்கட் செல்வம் செல்வமென் பதுவே” (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க. கண்டனம் வரற்குச் செல்லாமோதில் சில்வளை விறலியெனக் கூட்டிக்கொள்க. 1 - 4. ஓடாப்பூட்கை ............ கோமான். உரை : துணங்கை யாடிய வலம்படு கோமான் -வெற்றிக் குறியாகத் துணங்கைக் கூத்தாடிய வெற்றி பொருந்திய சேரமானாகிய வேந்தன் ; ஓடாப் பூட்கை மறவர் - தோற்றோடாத மேற்கோளையுடைய வீரரது ; மிடல் தப - வலி கெடும்படியாகப் பொருதழித்தலால் ; குருதி - அழியும் அவருடைய உடற்குருதி ; இரும்பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப - தான் அணிந்துள்ள பெரிய பனந்தோட்டாற் செய்த மாலையும் பெரிய வீரக் கழலும் சிவக்குமாறு ; பனிற்றும் - துளிக்கும் ; புலவுக் களத்தோன் - புலால் நாறும் போர்க்களத்தே அமைந்த பாசறையில் உள்ளான் எ - று. போரில் வெற்றிபெற்ற வேந்தன் வீரருடன் துணங்கையாடுவது பற்றி, “துணங்கை யாடிய வலம்படு கோமான்” என்றார். பூட்கை, மேற்கோள் |