பக்கம் எண் :

322

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : ஏவிளங்கு தடக்கை.

12 - 19. கானத்து .................. கிழவோனே.

உரை : கானத்துக் கறங்கு இசைச் சிதடி- காட்டிடத்தே ஒலிக்கின்ற
ஓசையையுடைய  சிதடிகள்  ;  பொரி  அரைப்  பொருந்திய - தமது
பொரித்த  அடிப்பகுதியிடத்தே  கொண்ட  ;  சிறி  இலை  வேலம்-
சிறுசிறு  இலைகளையுடைய  வேல  மரங்கள்  ; பெரிய தோன்றும் -
மிகுதியாய்த்  தோன்றும்  ; புன் புலம் வித்தும் புன்செய்களை யுழுது
பயிர்செய்யும் ; வன்கை வினைஞர் - வலிய கையினையுடைய உழவர்
; சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி - சிறப்பினையுடைய பலவாகிய
கடாக்களை அவற்றின் கழுத்திற் கட்டிய மணிகள் ஒலிக்கும்படி பூட்டி
யுழுது  ;  நாஞ்சில்  ஆடிய  கொழுவழி மருங்கின்  - கலப்பையின்
கொழுச்  சென்ற  படைச் சாலின் பக்கத்தே; அலங்கு கதிர் திருமணி
பெறூஉம்   -   அசைகின்ற   ஒளிக்   கதிர்களையுடைய   அழகிய
மணிகளைப்  பெறும்  ; அகன்கண் வைப்பின் நாடு - அகன்ற இடம்
அமைந்த ஊர்களையுடைய நாட்டுக்கு ; கிழவோன் - உரியவன் எ-று.

சிதடி,   சிள்வீடு என்னும் வண்டு. வேலங்காட்டிடத்தே மரங்களின்
பொரித்த   அரையிடத்தே   தங்கிப்   பேரிரைச்சல்   செய்தல்பற்றி,
“கானத்துக்  கறங்கிசைச்  சிதடி  பொரியரைப்  பொருந்திய  வேலம்”
என்றார்.  சிறிய  இலை, சிறியிலை யென நின்றது ; “புன்புலத்த மன்ற
சிறியிலை  நெருஞ்சி”  (குறுந்.  202)  என்று  வருதல் காண்க. வேல்,
வேலம் என அம்முப்பெற்றது. பெரிய தோன்றும் என்புழிப் பெருமை,
மிகுதிமேற்று ; “பெரியகட் பெறினே, யாம் பாடத் தானுண்ணு மன்னே”
(புறம்.  235)  என்புழிப்போல. புன்புலம், புன்செய். புன்புலம் வித்தும்
உழவராதலின்,  “வன்கை   வினைஞர்”   என்றார்.   உழுதொழிலிற்
பயிற்சியுடைமைபற்றி,   “சீருடைப்   பல்பகடு”   என்றார்.  நாஞ்சில்,
கலப்பை.  கொழு  வழி, கொழுச்சென்ற வழி ; அஃதாவது படைச்சால்
என   வறிக.  பெரிய  தோன்று  மென்றற்கு,  “பெருகத்  தோன்றும்”
என்றும்,   “பல்பகட்டையென  விரித்து,  அவை  யொலிப்பப்  பூட்டி
யெனக்  கொள்க”  என்றும்  பழையவுரைகாரர்  கூறுவர். உழுது என
ஒருசொல்  வருவிக்க,  உழுவார்  உழவுப்  பயனை யுடனே பெறுவார்
போல   உயர்   மணிகளைக்  கொழு  வழி  மருங்கே  பெறுகின்றன
ரென்பார்,  “அலங்கு  கதிர்த்  திருமணி பெறூஉம்” என்றார். வைப்பு,
ஊர்கள்.

2 - 8. வெண்தோட்டு .............பெருமகன்.

உரை :   வெண்  தோட்டு  அசைத்த  ஒண்பூங்   குவளையர் -
வெள்ளிய       பனந்தோட்டிலே       கட்டிய          ஒள்ளிய
குவளைப்பூவையுடையராய்  ;  வாள்  முகம்  பொறித்த மாண்   வரி
யாக்கையர்  -  வாளினது வாயால் வடுப்பட்ட மாட்சிமை பொருந்திய
தழும்புகளையுடைய உடம்பினராய் ;