பக்கம் எண் :

329

தன்      பகைவர்பால்   ஈண்டிய    பண்டங்களை” யென்றும், அறம்
புரிதல்  என்றதற்கு,   “நாடு காவலாகிய அறத்திலே மேவுதல்” என்றும்,
“பகுக்கும்  ஆறென்றது,   அப் பண்ணியங்களைப் பலர்க்கும் பகுத்துக்
கொடுக்கும் நெறியென்றவா” றென்றும் கூறுவர்.

நாடல்  சான்ற துப்பிற் பணைத்தோள் நினக்கு என்பார், தோளினது
வலியை   நாடல்  சான்ற  துப்பு   என்றது,  தோள்வலியை  எளிதாக்
கருதமாட்டாமையின்,     பகைவர்தம்     வலியும்     துணைவலியும்
படைவலியும்  ஒருசேரத்   தொகுத்து  நோக்கி  இவன்  தோள்வலிக்கு
ஆற்றாமை  கண்டு எண்ணமிடுதற் கேதுவாகிய வலி யென்றவாறு. பாடு,
பெருமை.   இனிப் பழையவுரைகாரர், பணைத் தோளையுடைய  நினக்கு
என்று    இயைக்காமல்,    பணைத்தோட்கு   அணியும்    நன்கலம்
என்றியைத்து,  “தோட்கல னென்றது  தோளிற் கேற்ற கல மென்றவாறு”
என்றும், “தோட்குத்  தருமென்றுமா” மென்றும் கூறுவர்.

நினக்குமார்    கடன்  என்புழி  உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது.
ஆர்; அசைநிலை ;  (தொல்.  இடை.  23)  மார்   என்றே  கொண்டு
அசைநிலையாக்குவர்    பழைய   வுரைகாரர்.  தரூஉம்  என்றதனால்,
திறைப்  பொருளாதல் பெற்றாம். அத் திறைப்  பொருளும்  அறம் புரிந்
தொழுகுதற்குப்  பயன்படுதலால்,   “நாடு    புறந்  தருதலும்   கடன்”
என்றாரென வுணர்க.

11 - 13. அறியாது ................. கண்ணி.

உரை : நின் பகைவர் -  நினக்குப் பகையாய  வேந்தர் ;  துப்பின்
அறியாது -  தம் வலி யொன்றே பற்றி நின் வலி யியல்பை  நன்கறியாது
;  எதிர்ந்து  -  எதிர்த்துப்  பொருது ; குறை   யுற்று - வலி யிழந்து ;
பணிந்து - நின்னைப் பணிந்து ; திறை தருப ஆயின்  -  திறையினைக்
கொணர்ந்து தருவராயின்; சினம் செலத்தணிமோ அவர்  மேற்  சென்ற
நின்   சினம்  தணிவாயாக ;  நின்  கண்ணி  வாழ்க  -  நின் கண்ணி
வாழ்வதாக எ - று.

நினக்குப்    பகையாயினார், நாடல் சான்ற நின் துப்பினை  நாடாது
பொருதழிந்ததற்கு  ஏது,  அவர்   தம்  அறியாமை  யென்றும்,  அது
தனக்கும்   ஏது,  தம்  வலியினைத்  தாமே  வியந்து கொண்டமையே
யென்றும்  கூறுவார், “அறியா  தெதிர்ந்து துப்பிற் குறையுற்று” என்றும்,
அதனால்   அவர்  செய்யக்கடவது  பணிந்து  திறைதருவதை  யல்லது
வேறில்லை  யென்றற்கு, “பணிந்துதிறை தருப  நின் பகைவர்” என்றும்,
அவர்கட்கு  நீ   செய்வது,  சினந்  தணிந்து  அருளுவதே  யென்பார்,
“சினம்  செலத் தணிமோ” என்றும், எனவே, பகைத்துக் கெட்டார்க்கும்
அருள்   சுரந்தளிக்கும்  நீ  நெடிது  வாழ்க  என  வாழ்த்துவதே எம்
போன்றோர்   செயற்பால  தென்பார், “வாழ்க நின் கண்ணி”  யென்றும்
கூறினார்.  “பாடுசால் நன்கலம்  தரூஉம் நாடு புறந் தருதல் நினக்குமார்
கடனே”    என்ப  வாகலின்,  “சினம்  செலத்தணிமோ”  என்றாரென
வுணர்க.   மோ  :  முன்னிலை   யசை.  இக்  கருத்தே  பற்றிப்  பிற
சான்றோரும்,  “புரைவது   நினைப்பிற்  புரைவதோ  வின்றே,  பெரிய
தப்புந   ராயினும், பணிந்து திறை பகரக் கொள்ளுநையாதலின்” (பதிற்.
17)  என்று கூறுதல் காண்க.