ஒருகால், விருந்துவரக் கரைந்த காக்கையைக் காதலன் பிரிவால் வேறுபட்டு வருந்தும் தலைமகளொருத்தி கூற்றில்வைத்து இவர் ஒரு பாட்டைப் பாடினர். அப் பாட்டுக் குறுந்தொகையுள் சான்றோரால் கோக்கப்பட்டுள்ளது. அப்பாட்டின் நலங்கண்டு வியந்த செந்தமிழ்ச் சான்றோர் நச்செள்ளையாரைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனப் பாராட்டுவாராயினர். அதுமுதல் அவரும் காக்கைபாடினியார் நச்செள்ளையாரென வழங்கப் பெறுகின்றனர். பண்டைநாளில், மகளிர்க்குச் செள்ளையெனப் பெயரிடுவது வழக்க மென்பதனை, “வேண்மாள் அந்துவஞ் செள்ளை” என இந்நூலின் ஒன்பதாம்பத்தின் பதிகம் கூறுவதனால் இனிது தெளிவாம். காக்கைபாடினியார் இந்நூல் ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். அவர் பாட்டையேற்று மகிழ்ந்த சேரலாதன் அவர்க்கு அணிகலனுக்கென ஒன்பது காப்பொன்னும், நூறாயிரம் பொற்காசும் வழங்கியதோடு, தன் அரசவைப் புலவராகத் தன்பக்கத்தே இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். நச்செள்ளையாரும் அவன் பக்கத்தே யிருந்து அமைச்சியற் புலமை நடத்தி வந்தார். ஒருகால் சேரலாதன், மகளிர் ஆடல் பாடல்களில் பெரிதும் ஈடுபாடுடையனாய் இருப்பது கண்டார். பேரீடுபாடு அரசியற்கு ஊறுவிளைக்கும் என்பது கண்ட நச்செள்ளையார், “சுடர்நுதல்மடநோக்கின் வாணகை இலங்கெயிற், றமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர், பாடல் சான்று நீடினை யுறைதலின், வெள்வேலண்ணல் மெல்லியன் போன்மென, உள்ளுவர் கொல்லோ நின் உணராதோரே”யென்று தெருட்டினர். ஒருகால் சேரலாதன் மகளிராடும் துணங்கை கண்டு இன்புற்று வந்தானாக, உடனிருந்து கண்ட அவன் மனைவி அவன்பால் ஊடல்கொண்டு பிணங்கலுற்றாள். அப் பிணக்கத்தின்கண் அரசமாதேவி தன் கையிலிருந்த சிறிய செங்குவளைப் பூவை அவன்மேல் எறிதற்கு ஓங்கினாள். அவள் கையகத்திருக்கும் பேறுபெற்ற குவளைமலர் தன்மேனியிற்பட்டு வாடுதல் காணப்பொறானாய் அதனைத் தன் கையிற்றருமாறு அவளை இரந்து கேட்கவும், அவள் சினந் தணிதலின்றி, “நீ எமக்கு யாரையோ” எனச் சொல்லிப் பெயர்ந்து போயினள். வளவிய இளமைநலஞ் சிறந்த சேரலாதன் அவளது சிவப்பாற்றுந் துறையில் மிக்க மெல்லியனாய் நடந்துகொண்டது காக்கைபாடினியாரால் தேனூறுஞ் சொற்களால் இப் பத்தின் கண் அழகுறப் பாடப்பட்டுள்ளது. ஒருகால் இச்சேரலாதன் இரவலர்பால் கொண்டிருக்கும் அருட்பெருக்கைக் கண்டார் காக்கைபாடினியார்; அவனது மனைவாழ்வையும், அவர் நன்கறிந்திருந்தார்; அதனால், அவர் மனத்தெழுந்த வியப்பு, “இளந் துணைப் புதல்வர் நல்வளம் |