கனி, தீவிதாகாமையின், “அஞ்சே றமைந்த முண்டை விளை பழம்” என்றார். முற்றக் கனிந்த பழமென்றற்கு, விளை பழமெனப்பட்டது. பழையவுரைகாரரும், “முண்டை விளை பழம், முட்டைகள் போலும் விளை பழ” மென்றும் “முட்டை யென்றது மெலிந்த” தென்றும், “மரம்படு தீங்கனியாகிய முட்டை விளை பழம் என இரு பெயரொட்” டென்றும் கூறுவர். வழிச்சாலைகளில் இனிய பழமரங்களை அறத்தின் பொருட்டுவைத்து வளர்ப்பது பண்டையோர் இயல்பு. வழிச் செல்வோர், அப்பழங்களையுண்டு, வழி வருத்தம் போக்கிக் கொள்வது பயன். இக் காலத்தே சாலையிடத்துப் பழமரங்கட்குக் காவலிட்டு வழிச் செல்வோர்க்குப் பயன்படாவாறு நீக்கிச் சாலை வருவாயாகப் பொருளீட்டுவது இயல்பாய் விட்டது. “அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்” (குறுந். 209) என்றும், “நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர், செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி” (அகம். 271) என்றும் வருவன காண்மின். இவ்வண்ணம் இப் பழங்கள் வழிச்செல்வோர்க்குப் பயன்படுதலை, “செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி” என்று சான்றோர் கூறியது போல, ஈண்டும், “ஆறுசென் மாக்கட்கு ஓய்தகை தடுக்கும்” என்பது காண்க. ஓய்தகை, களைப்பு. பண்டை நாளெல்லாம் பெருக விளைந்த வயல், உரம் குன்றி விளைவு பெருகா தொழிதலை, “வயல் விளைவு மறுப்ப” என்ப வாகலின், விளைவு பெருக நல்கும் வயலை, “மறாஅ விளையுள்” என்றார் ; “தொல்லது விளைந்தென நிலம் வளம் கரப்பினும், எல்லா வுயிர்க்கும் இல்லால் வாழ்க்கை” (புறம். 203) என ஊன் பொதி பசுங் குடையா ரென்னும் சான்றோர் கூறுதல் காண்க. இவ் விளையுளால் நாளும் புது வருவாய் குன்றாமையின், “அறாஅ யாணர் நறவு” என்றார். பழையவுரைகாரர், “அறாஅ யாண ரென்றது இடையறாத கடல் வருவாய் முதலாய செல்வங்களை” யென்பர். தொடுத்தல் தொடை யென நின்றது ; விடுத்தல் விடையாயது போல. சிலையுடைய மறவர், தாமேந்தும் சிலை அம்பு தொடுக்காது மடிந்திருத்தலை வெறுத்துப் போர்வேட்டுத் திரியும் செருக்குடைய ரென்றற்கு, “தொடை மடி களைந்த சிலையுடைய மறவர்” எனப்பட்டனர். இவர்களை ஊதைக் காற்றன்றிப் பிற எவ்வுயிரும் எச் செயலும் நடுங்குவித்தல் இல்லையென்பது தோன்ற, “சிலையுடை மறவர் ஊதையிற் பனிக்கும் நறவு” என்றார். அவ் வூதையும் புணரியும் மங்குலும் கலந்து வந்தல்லது பனிக்கு மாற்றலுடைத்தன் றென்பதும் உரைத்தவாறு காண்க. பழையவுரைகாரரும், “மறவர் கடலூதையிற் பனிக்கும் நறவெனக் கூட்டி ஆண்டு வாழும் மறவர் கடலூதையால் மட்டும் நடுங்கும் நற வென்க” என்றும், “நறவு ஓர் ஊர்” என்றும், “துவ்வா நறவு வெளிப்படை” யென்றும் கூறுவர். இனி, அவர், தொடை மடி யென்றற்கு, “அம்பு தொடுத்து எய்தலில் மடிதல்” என்றும், “புணரியொடு மங்குலொடு என ஒடுவை இரண்டிடத்தும் கொள்க” என்றும் மயங்கி யென்றதை, “மயங்க வெனத் திரிக்க” வென்றும், “மயங்குவது வருகின்ற வூதை யெனக் கொள்க” என்றும் கூறுவர். சாய், மென்மை. ஈண்டு ஆகு பெயரால், மென்மையை இயல்பாகவுடைய மகளிர் மேல் நின்றது. இம் மகளிர் சேரலாதற்குத் தம் ஆடல் பாடல் |