முதலியவற்றால், இன்புறுத்துபவர். இவருடைய கூட்டத்திடையே வேந்தன் உள்ளான் என்பார், “சாயினத்தான்” என்றார். 1 - 3. கொலை வினை .............. காணியர். உரை : தானை கொலை வினை மேவற்று- தன் சேனை போராகிய கொலைத்தொழிலை விரும்பும் இயல்பிற்றாக ; தான் இகல் வினை மேவலன் - தான் சாயினத்தா னாயினும் உள்ளத்தால் பகைவரைப் பொரும் தொழிலையே விரும்புவ னாதலால் ; தண்டாது வீசும் - நாம் சென்ற வழி நமக்குப் பகைப் புலத்தே பெறும் அருங்கலன்களை வரையாது வழங்குவன் (ஆகவே) ; பாண் மகள் - பாண் மகளே ; காணியர் செல்லாமோ - அவனைக் காண்டற்குச் செல்வேமோ எ - று. பாண்மகள் : அண்மைவிளி. தில் : விழைவின் கண் வந்தது. புறத்தே நோக்குமிடத்துச் சேரலாதன் நறவென்னு மூரிடத்தே மகளிர் கூட்டத்திடையே இருந்தா னாயினும், அவனுள்ளம் பகைவரை யழித்தலாகிய இகல் வினையே மேவி யுளதென்பார், “தானே இகல் வினை மேவலன்” என்றும், அவன் உள்ளக்குறிப்பின்வழி அவன் தானை வினை மேவிய இயல்பிற்றென்பார், “கொலை வினை மேவற்றுத் தானை” என்றும், இவ்வண்ணம் வினை மேற் கொண்டிருப்பினும் நம்போலும் கூத்தர்க்கும் பாணர்க்கும் கொடுப்பன கொடுத்தலிற் குறைவிலன் என்றற்குத், “தண்டாது வீசும்” என்றும், ஆகவே அவன்பாற் செல்வது தக்க தென்பார், “செல்லாமோ தில் காணியர்” என்றும் கூறினார். காணியர் : செய்யிய ரென்னும் வினையெச்சம் ; இது செல்லாமோ என்னும் முற்றுவினை கொண்டது. இதுகாறும் கூறியவாற்றால், மரம்படு தீங் கனியாகிய விளை பழம், மாக்கட்கு ஓய் தகை தடுப்பதும், அறாஅ யாணரை யுடையதும், மறவர் பனிக்கும் இடமாயதுமாகிய நறவு என்னும் ஊரின்கண் ஆய மகளிர் கூட்டத்திடையே இருந்தானாயினும், தன் சேனை கொலை வினை மேவற்றாக, தான் இகல் வினை மேவல னாதலால், நாம் சென்று காணின் தண்டாது வீசும் ; ஆதலால், பாண் மகளே, அவனைக் காணியர் செல்லாயோ என்று வினைமுடிவு செய்து கொள்க. இனிப் பழையவுரைகாரர், “அவன்றான் இப்பொழுது துவ்வா நறவின் சாயினத்தான் ; இனித் தானை கொலைவினை மேவற்று ; ஆகலால் தான் இகல்வினை மேவலன் ; இன்ன பொழுது இன்னவிடத்து எழுமெனத் தெரியாது, பாண் மகளே, நாம் அவனைக் காணியர் செல்லாமோ ; செல்லின் தண்டாது வீசும் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறியவாறாயிற்று”. |