பக்கம் எண் :

336

சிறிய         இலையினையும்    ;      புன்கால்    -    புல்லிய
அடிப்பகுதியினையுமுடைய   ;   உன்னத்துப்  பகைவன்  -  உன்ன
மரத்துக்குப்  பகைவனும்  ;  எம் கோ - எமக்கு அரசனும் ; புலர்ந்த
சாந்தின்   மலர்ந்த  மார்பின்  - பூசிப்  புலர்ந்த  சாந்தினையுடைய
அகன்ற  மார்பினையும்  ;  புலரா ஈகை  மாவண்  பாரி  - குன்றாத
ஈகையால் பெரிய வள்ளன்மையினையு முடையானுமாகிய பாரி எ - று.

பெரு     விறலும், கணவனும், பகைவனும், கோவுமாகிய பாரி என
இயையும்.  பலாஅம்  பழுத்த  பசும்  புண்  என்றதனால்,   பலாவின்
பழமும் அது முதிர்ந்து வெடித்திருத்தலும் பெற்றாம்.  பலாஅப் பழுத்த
எனற்பாலது  மெலிந்து  நின்றது. பழத்தின் வெடிப்பு புண்  போறலின்,
“பசும்புண்”   என்றும்,   அதனினின்று  அரித்  தொழுகும்  தேனை
“அரியல்”   என்றும்   கூறினார்.   “புண்ணரிந்து,   அரலை புக்கன
நெடுந்தாளாசினி”  (மலைபடு.  138-9) என்று பிறரும் கூறுதல் காண்க.
வாடைக்காற்று    வீசுங்கால்    இத்   தேன்   சிறுசிறு   துளிகளாக
எறியப்படுதலின்,  “வாடை  துரக்கும்”  என்றார்.  நாடு.  பறம்பு நாடு.
“பறம்பிற்  கோமான் பாரி” (சிறுபாண். 91) என்று சான்றோர் கூறுமாறு
காண்க.   ஓவியம்,   ஓவமென   நின்றது,  “ஓவத்தன்ன  விடனுடை
வரைப்பில்”  (புறம்.  251) என்றாற்போல. பல்வகை வேலைப்பாட்டால்
அழகு  செய்யப்பட்ட  மனை  யென்றற்கு,  “வினை  புனை நல்லில்”
என்றும்,   மேனி  நலத்தால்  பாவை  போறலின்,  “பாவை  யன்ன”
என்றும்,  குண  நலத்தி்ன்  சிறப்புத்  தோன்ற,  “நல்லோ” ளென்றும்
கூறினார்.  பாவை யுவமம் மேனி நலத்தை விளக்கி நிற்றலை, “பாவை
யன்ன  பலராய்  மாண்கவின்”  (அகம்.  98)  என வரும் சான்றோர்
உரையானு    மறிக.    உன்னம்,   ஒருவகை   மரம்.   இதன்   பூ
பொன்னிறமாயும்    இலை   சிறிதாகவும்   அடிமரம்   புற்கென்றும்
இருக்குமென்பது,   “பொன்னி  னன்ன  பூவிற்  சிறியிலைப்,  புன்கா
லுன்னம்”  என்பதனால்  விளங்குகிறது.  உன்ன  மரம்  போர்  வீரர்
நிமித்தம்    காண    நிற்கும்   மரம்   ;   காண்போர்க்கு  வெற்றி
யெய்துவதாயின்   தழைத்தும்,  தோல்வி  யெய்துவதாயின்   கரிந்தும்
காட்டும்  என்ப.  அது  கரிந்து  காட்டிய வழியும் அஞ்சாது அறமும்
வலியும்  துணையாகப்  பொருது வெற்றி யெய்தும் வேந்தன் என்றற்கு
“உன்னத்துப்  பகைவன்”  என்றார்  ;  தான் எய்துவது தோல்வியென
உன்னமரம்    காட்டவும்   காணாது,   பொருது   வென்றி  யெய்தி
உன்னத்தின் நிமித்தத்தைக் கெடுத்தல் பற்றிப் பகைவ னென்பாராயின
ரென்க.

பூசிய   சாந்தின் ஈரம் புலர்ந்தாலும், ஈதற்குக் கொண்ட  நெஞ்சின்
ஈரம்   எஞ்ஞான்றும்  புலராது  ஈகை  வினையைப்  புரிவித்தல்பற்றி,
“புலர்ந்த  சாந்திற்  புலரா வீகை” என இயைத்துச் சொன் முரணாகிய
தொடையழகு  தோன்றக் கூறினார். கூறினா ராயினும், சாந்து பூசுதற்கு
இடனாவது  மார்பும்,  ஈகைவினைக்  கிடனாவது வண்மையு மாதலின்,
புலர்ந்த  சாந்தின்  மலர்ந்த  மார்பு” என்றும், “புலரா வீகை மாவண்
பாரி” யென்றும் இயைத்துப் பொருள் கூறப்பட்டதென வறிக.

இனிப்     பழையவுரைகாரர்,  “பலாஅம்   பழுத்த  -  பலாஅப்
பழுத்தவென்னும்   பகர   வொற்று   மெலிந்தது”  என்றும்,  “பசும்
புண்ணென்றது  புண்பட்ட வாய் போலப் பழுத்து வீழ்ந்த பழத்தினை”
யென்றும்,  “அரியலென்றது  அப்  பழத்தினின்றும்  பிரிந்து அரித்து
விழுகின்ற தேனை” யென்றும் கூறுவர்.