காரிக்குக் கூறுமாற்றால் அவரது உட்கோள் அறியப்படும். இனிப், பழையவுரைகாரர், “இரக்கென்றது தன்மைவினை” யென்றும், “எஞ்சிக் கூறேனென்றது, உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேனென்றவாறு” என்றும் கூறுவர். பிறரும், “செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின் றெஞ், சிறு செந்நாவே” என்று கூறுதல் காண்க. மேலே, தாம் கேள்வியுற்றதை எடுத்தோதுகின்றா ராதலின், வேந்தன் இனிதேற்றுக் கோடற்பொருட்டு, “எஞ்சிக் கூறேன்” என்று முகம் புகுகின்றார். “ஈத்ததிரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறு மாவள்ளியன்” என்பது உலகு கூறும் புகழுரை. ஈதலால் பொருள் செலவாயினும், மேன்மேலும் ஈட்டிக்கொள்ளும் வன்மையுடைய னாதலால், “ஈத்த திரங்கான்” என்றும், ஈயுந்தோறும் இன்பம் பெருகிய வழியும், அதனை நினையாது ஈதல் சான்றோர் சென்னெறி யெனக் கருதுமாறு தோன்ற, “ஈத்தொறு மகிழான்” என்றும், முற்பகல் சென்றோரே பிற்பகல் செல்லினும் “முன்னே தந்தனெ னென்னாது துன்னி, வைகலும் செல்லினும் பொய்யலனாகி” (புறம். 171) மிக்க பொருளை வழங்குதலின், “ஈத்தொறும் மாவள்ளியின்” என்றும் உலகம் அவனைப் புகழ்ந்துரைப்பது கேட்டே னென்பார், “என நுவலும் நின் நல்லிசை” யென்றார். யான் வாரே னாயினும், நின் நல்லிசைக் கேள்வி என் உண்ணின்று துரப்ப வந்தே னென்பார், “நின் னல்லிசைதர வந்திசினே” என்றார். உலகவர் என ஒரு சொல் வருவிக்க. “ஈவோரரிய விவ்வுலகத்து, வாழ்வோர் வாழ” வாழும் நின்போன்றாரைக் காண்டலின் இன்பம் பிறிதில்லை யாதலின் வந்தேன் என்றாரென்றுமாம். பிறாண்டும், “நின் நோன்றாள் வாழ்த்திக், காண்கு வந்திசின் கழறொடி யண்ணல்” (பதிற். 64) என்று கூறுதல் காண்க. பழையவுரைகாரர், “ஈத்தற்கென நான்காவது விரிக்க” என்றும், “ஈத்தொறு மகிழானென்றது, ஈயுந்தோ றெல்லாம் தான் அயலா யிருத்த லல்லது ஈயா நின்றோமென்று ஒரு மகிழ்ச்சி யுடையனல்ல னென்றவா” றென்றும், “நுவலும் என்றதற்கு உலகம் நுவலுமென வருவிக்க” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியவாற்றால், பெரு விறலும், கணவனும், உன்னத்துப் பகைவனும் எம் கோவுமாகிய மாவண்பாரி, வாராச் சேட்புலம் படர்ந்தோன் ; அளிக்க என இரக்கு வாரேன் ; எஞ்சிக் கூறேன் ; நின் கலி மகிழின்கண்ணே, நின் நல்லிசை தர வந்திசின் என்று வினைமுடிபு கொள்க. பழையவுரைகாரர், “யான் பாரி சேட்புலம் படர்ந்தோன் ; நீ அளிக்கவெனச் சொல்லி இரக்கென்று வந்து சில புகழ்ந்து சொல்லுகின்றேனுமல்லேன் ; அஃதன்றி, உண்மை யொழியப் புகழ்ந்து சொல்லுகின்றேனுமல்லேன் ; ஈத்ததற்கு இரங்காமை முதலாகிய அப் பாரி குணங்கள் நின்பாலும் உளவாக, உலகம் சொல்லும் நின் புகழை நின்பாலே தர வந்தேன், நின் பாசறையின் கலி மகிழின் கண்ணே என வினை முடிவு செய்க” என்று கூறுவர். “இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பொடுபடுத்து அவன் கொடைச் சிறப்புக் கூறியவா றாயிற்று”. |