பயந்த வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை, ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை, ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும், இரவலர் புன்கண் அஞ்சும், புரவெதிர் கொள்வன்” என்று ஒரு பாட்டைப் பாடுவித்தது. சேரலாதன், “உலகம் தாங்கிய மேம்படு கற்பு” உடையனெனவும், “ஒல்லார்யானை காணின், நில்லாத்தானை இறைகிழ” வோன் எனவும் பொய்படு பறியா வயங்கு செந்நாவின், எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை, ஏந்தெழிலாகத்துச் சான்றோர் மெய்ம்மறை, வானவரம்பன்” எனவும் அவனுடைய கல்வி, ஆண்மை முதலியவற்றைப் பாராட்டும் இவர், தமது ஆராமையால், “எனையதூஉம், உயர்நிலையு லகத்துச் செல்லாது இவண் நின்று, இருநில மருங்கில் நெடிது மன்னியரோ” என வாழ்த்துவது மிக்க இறும்பூது பயக்கின்றது. இவையும் இவைபோலும் பிற நலங்களும் இப்பத்தின்கண் நிறைந்துள்ளன. கபிலர் : சங்கத் தொகை நூல்களிற் காணப்படும் சான்றோர்களுள் சான்றோர் பரவும் சால்புமிக்கவருட் கபிலர் சிறந்தவராவர். இவர் இந் நூலில் ஏழாம்பத்தால் செல்வக் கடுங்கோவாழியாதனைச் சிறப்பித்துள்ளார். “யானே பரிசிலன் மன்னும் அந்தணன்” எனத் தாமே தம்மை அந்தணனென்று கூறுவதும், மாறோக்கத்து. நப்பசலையார் “புலனழுக்கற்ற அந்தணாளன்” என்பதும் நோக்குவார், இவர் அந்தணரில் தலையாய அந்தணரென விழைவர். இவர் பறம்புநாட்டு வாதவூரிற் பிறந்தவர். வாதவூர்க் கல்வெட்டுக்களே அதனைத் “தென் பறம்புநாட்டுத் திருவாதவூர்” என்று குறிக்கின்றன. இந்நாட்டு வேந்தனான வேள்பாரிக்குக் கபிலர் உயிர்த்துணைவராவர். அவன் இறந்தபின் அவன் மகளிரைக் கபிலர் தன் மக்களாகக் கொண்டு சென்று திருக்கோவலூரில் மலையமான் மக்களுக்கு மணம் புரிவித்த செய்தி உலகறிந்ததொன்று. திருக்கோவலூர்க் கல்வெட்டொன்று, “மொய்வைத்தியலு முத்தமிழ் நான்மைத், தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன், மூரிவண்டடக்கைப் பாரிதன் னடைக்கலப், பெண்ணைமலையர்க் குதவிப் பெண்ணை, அலைபுன லழுவத் தந்தரிக்ஷஞ்செல, மினல்புகு விசும்பின் வீடு பேறெண்ணிக், கனல் புகுங் கபிலர்க்கல்லது” (S.I.I.Vol. VII. No.863) என்று கூறுகிறது. இவர் பாடியனவாகச் சங்கத் தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றொழிய ஏனையெல்லாவற்றினும் பல பாட்டுக்கள் உண்டு. பதினென்கீழ்க்கணக்கென்பனவற்றுள் ஒன்றான இன்னா நாற்ப தென்பதும் கபிலர் பாடியதெனப்படு்கிறது. இவர் வரலாறு, புலமைத்திறம் முதலிய நலங்களைக் காலஞ்சென்ற திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் மிக அழகாக எழுதி வெளியிட்டிருக்கின்றனர். வேறு சில அறிஞர்களும் |