போர் மேற்கொண்டு செல்லும் பகைப் புலத்தே எடுக்கும் தீ, ஈண்டுப் பசும் பிசிர் ஒள்ளழல் எனப்பட்டது. இது சேரமான் பகைப் புலத்தே எடுத்த தீயாகும். இதனை, “எரிபரந் தெடுத்தல்” என்று இலக்கணம் கூறும். பகைவர் நாட்டில் பலவிடங்களிலும் தீ யெழுந்து பொறி பறக்கச் சுடர்விட் டெரிவது பற்றி, “பசும்பிசிர் ஒள்ளழல்” என்றும், பலவிடத்தும் தோன்றும் தீ, “ஞாயிறு பல்கியது போறலின், “ஞாயிறு பல்கிய மாயமொடு” என்றும் கூறினார். மாயம் போறலின் மாயமெனப்பட்டது. திகழ வென்பது திகழ்பென நின்றது. பெரு முழக்கம் கேட்டவழி உயிர்கட்கு மயக்க முண்டாதல் இயல்பாதலால், “ஒல்லா மயலொடு பாடிமிழ்பு” என்றும், “எல்லா வுயிர்களையும் ஒடுக்கும் திறல்பற்றி கூற்றினை “மடங்க” லென்றும் கூறினார். “மடங்கலுண்மை மாயமோ வன்றே” (புறம். 363) என்பதனால், மடங்கல் இப்பொருட்டாதலறிக. இனிப் பழைய வுரைகாரர், “ஞாயிறு பல்கிய மாயமொடு உழிதரு மடங்கல் எனக் கூட்டி, உலகம் கடல் கொண்டு கிடந்த காலத்து அக்கடல் நீரெல்லாம் வற்ற எறித்தற்குத் தோன்றும், ஆதித்தர் பலவான மாயத்தோடே கூடி அந்நீர் வற்றும்படி திரிதரு வடவைத் தீ யென்றுரைக்க” என்றும், “சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரு மடங்கல் என்றது, சுடர் திகழ்ந்து உயிர்கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச் செய்தலோடே ஒலித்துத் திரிதரும் மடங்கல் என்றவா” றென்றும், “ஒள்ளழல் மடங்கல் வண்ணம் கொண்ட எனக்கூட்டி ஒள்ளழலானது மடங்கலாகிய அழலின் வண்ணத்தைக் கொள்கைக்குக் காரணமாய் நின்ற வென வுரைக்க” என்றும், “இனி ஞாயிறு பலவாதலை அவன் பகைவர் நாட்டின் உற்பாதமாகத் தோன்றும் ஆதித்தர் பலராக்கி, மடங்கலென்றதனைக் கூற்றமாக்கி, “சுடர் திகழ்பு என்றதனைத் திகழ வெனத் திரித்து, ஒள்ளழலானது ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ, மடங்கல் வண்ணங் கொண்ட வேந்தே யெனவுரைப்பாரு முளர்” என்றும் கூறுவர். 1 - 5. இழையணிந்து ................... இறுக்கும். உரை : இழையணிந்து எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு - ஓடையும் பொன்னரிமாலையு முதலாகிய அணிகளைப் பூண்டு எழுகின்ற பலவாகிய யானைத் தொகுதியும் ; மழையென மருளும் மா இரும் பல் தோல் - மழை மேகமென்று மயங்கத்தக்க கரிய பெரிய பலவாகிய கிடுகை ஏந்திய படையும் ; எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு - வேல் வாள் முதலிய படையேந்திய வீரர்படையினைச் செயலறப் பொருதழித்த கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரைப் படையுமாகிய நின் தானை, மைந்துடை ஆரெயில் புடைபட வளைஇ வந்து - வலியினையுடைய கடத்தற்கரிய பகைவரது மதிற் பக்கத்தே நெருங்க வளைத்து வந்து ; புறத்து இறுக்கும் - மதிற்புறத்தே தங்கியிருக்கின்றது எ - று. ஒடு, எண்ணொடு, தோலென்பதனோடும் கூட்டுக. தொழுதியும் தோலும் புரவியும் ஆகிய நின் தானையென ஒரு சொல் வருவித்து எயில் |