புடைபட வளைஇ வந்து புறத்திறுக்கும் என இயைக்க. போர்க் களிற்றின் முகத்தே ஓடையும் எருத்தத்திற் பொன்னரி மாலையும் அணிப வாதலின் “இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதி” யென்றார். இழையணிந்து போர்க்குரிய குறிப்பினைத் தெரிவித்ததும் களிறு வீறுகொண்டெழுமாறு தோன்ற, “எழுதரும்” என்றார். தோல், கிடுகு, கரிய தோலாற் செய்தமையின், கிடுகின் தோற்றம் மழை மேகம் போறலின், “மழையென மருளும் பஃறோல்” என்றார் ; “புரை தவ வுயரிய மழைமருள் பஃறோல்” (மலைபடு. 377) எனப் பிறரும் கூறுதல் காண்க. பழைய வுரைகாரர், பஃறோலொடு வென்னும் ஒடு, விகாரத்தால் தொக்க தாக்கி விரிக்க” என்பர். வாளும் வேலும் ஏந்திய படையென்றற்கு “எஃகுபடை” என்றார். படைவரிசையின் நிரை சிதைத்துக் கடந்து செல்லும் பேராண்மை விளங்க, “எஃகு படை யறுத்த கொய்சுவற் புரவி” யென்றார். குதிரையின் பிடரி மயிரை அவ்வப்போது கத்தரித்து விடுபவாதலின், “கொய்சுவ” லெனப்பட்டது. உயர்வு, அகலம், திண்மை முதலியவற்றாலும் பல்வகைப் பொறிகளை யுடைமையாலும் அருமையுடைத்தாதல்பற்றி, “மைந்துடை ஆரெயில்” எனப்பட்டது. களிற்றுத் தொழுதி முதலாகவுள்ள படை போந்து பகைவர் மதிலை வளைத்துப் புறத்தே தங்கியிருப்பது விளங்க, “வந்து புறத்திறுக்கும்” என்றார். இனி, நின் தோற்படை களிற்றுத் தொழுதியொடும் புரவியொடும் வந்து புறத்திறுக்கும் என இயைத்தலு மொன்று. 10 - 12. புனல் பொரு ............... பகைவராயின் உரை : புனல்பொரு கிடங்கின் - நீர் மிக்குக் கரையையலைக்கும் அகழியினையும் ; வரைபோல் இஞ்சி - மலைபோலும் மதிலினையும் கொண்டு ; அணங்குடைத் தடக்கையர் - தமக்குப் பொருந்தாதாரை வருத்துதலை யுடைய பெரிய கையினை யுடையராய் ; நின் பகைவர் - நினக்குப் பகைவரு மாயினார் ; தோட்டி செப்பி - வணங்கிய மொழிகளைச் சொல்லி ; பணிந்து - நின் தாளில் வீழ்ந்து வணங்கி ; திறை தருபவாயின் - திறை செலுத்து வாராயின் எ - று. ஆழ்ந்த கிடங்கும் மலையென வுயர்ந்த மதிலும,் தம்மொடு மாறுபட்டாரை வருத்தி யலைக்கும் பல்வகை வலியு முடையராயினும் நின்னொடு பொருது வேறல் முடியாதென்பது துணிபு என்பார், கிடங்கினையும் இஞ்சியினையும் அவர்தம் கையினையும் சிறப்பித்தோதினார் நின்தானையின் பெருமையும் வன்மையும் நோக்கின், அதனால் வளைக்கப்பட்ட இவ்வகழியும் இஞ்சியும் வலியில்லனவா மென்பதுணராது, “புனல்பொரு கிடங்கின் வரைபோ லிஞ்சி” யெனத் தம்மரண் சிறப்பைத் தாமே வியந்திருப்பதைப் புலப்படுத்தா ரென்றும், அச் சிறப்பால் இப்பாட்டிற்கு வரைபோ லிஞ்சியெனப் பெயராயிற் றென்றும் கொள்க.” “வரைபோலிஞ்சியை அரணாகவுடையரா யிருந்தே திறை தருப எனச் சொன்ன சிறப்பானே இதற்கு வரைபோலிஞ்சியென்று பெயராயிற்”றென்பது பழையவுரை. அணங் குறுத்தற் கேதுவாகிய வலியினை “அணங்” கென்றார். தோட்டி போலத் தலை வணங்கி மொழிதலின், “தோட்டி செப்பி” யென்றார்; |