காட்டியின்புறத்தலின், “வணங்குசிலை பொருத மணங்கம ழகலம் மகளிர்க்கல்லது மலர்ப்பறியலை” யென்றும் கூறினார். “மகளிர் மலைத்தலல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறம். 10) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, இதற்கு வில்லை வணக்கி அம்பு தொடுக்கும் செயலால் உராய்ந்த மார்பு என்று கூறி, “மாண் வினைச் சாப மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை” (பதிற். 90) என்பதனைக் காட்டுவர் உ. வே. சாமிநாதையர். பழையவுரைகாரரும், “அகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே என்றது, நின்னொடு பொருவாரின்மையின் நின் அகலத்தை நின் ‘மகளிர் போகத்துக்கு இடமாக வல்லது மலர்வித்தலையறியாயென, ‘மகளிர் மலைத்தலல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப’ என்றது போலக் கொள்க” என்று கூறுதல் காண்க. பணியாவுள்ள மென்றதற்கு, “நட்பு நின்ற நிலையின் ஒருநாளும் தாழ்வுபடாதவுள்ளமென்றவா” றென்றும், “கெழீஇ யென்னும் எச்சத்தினை நட்டலென்னும் தொழிலொடு முடிக்க” என்றும் பழையவுரை கூறும். நிலவகை, குறிஞ்சி முதலாகக் கூறப்படுவன. பொய்யாவழி நிலம் திறம் பெயர்ந்து கெடுதற்குரிய கால மெய்துமாயினும், சொன்னசொல் பொய்ப்பதிலன் எனச் சேரமானுடைய வாய்மையைச் சிறப்பிப்பார், “நிலந்திறம் பெயரும் காலையாயினும், கிளந்த சொல்நீ பொய்ப் பறியலை” என்றார். உம்மை, எதிர்மறை. “நிலம்புடை பெயர்வதாயினும் கூறிய, சொற்புடை பெயர்தலோ விலரே” (நற். 389) என்று பிறரும் கூறுதல் காண்க. மணங்கம ழகலம் என்புழிக் கமழ்தற் கேதுவாகிய சாந்தின் பூச்சு வருவிக்கப்பட்டது. 8 - 12. சிறியிலை ................. போரோயே. உரை : சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி - சிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையை யணிந்து ; கொண்டி மிகை பட - பகைப் புலத்தே கொள்ளத்தக்க பொருள் மிக வுண்டாமாறு ; தண் தமிழ் செறித்து - தண்ணிய தமிழ் வீரர்களாலாகிய தன் படையை மேன்மேற் செலுத்தி ; குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி - மலைகள் நிலை தளர முழங்கும் இடியேறு போலச் சினந்து சென்று; ஒரு முற்று இருவரோட்டிய - ஒரு வளைப்பில் இரு பேரரசர்களை வென்று புறங்கண்ட ; ஒள்வாள் செருமிகு தானை- ஒள்ளிய வாளேந்திச் செய்யும் போரில் மேம்பட்ட தானையினையும் ; வெல் போரோய் - வெல்லுகின்ற போரினையுமுடையோனே எ - று.
செய்வது உழிஞைப்போர் என்றற்கு “உழிஞைத் தெரியல் சூடி” யென்றார். இப் போரால் பகைவருடைய முழுமுத லரணத்தைக் கொண்டவழி, மிக்க பெருஞ் செல்வம் கொள்ளையாகப் பெறப்படுதலின், “கொண்டி மிகைபட” என்றும், முற்றலிலும் கோடலிலும் தலைசிறந்தவராதல்பற்றித் தமிழ் வீரரையே மிகுதியாகச் செலுத்தினமை தோன்ற, “தண்டமிழ் செறித்து” என்றும், சேரவேந்தன் தானும் அவ் வீரருடன் சென்று |