அவர்க்குத் தலைமை தாங்கிப் பொரும் திறத்தை, “குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி ஒருமுற் றிருவ ரோட்டிய வெல்போரோயே” என்றும் கூறினார். அவன் சீற்றத்தால் மலைபோலும் மதிலும் பிற அரண்களும் அழிவது கண்டு, “குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி” என்றும், தன்னால் வளைக்கப்பட்ட பேரரசனையும் அவற்குத் துணையாகப் போந்தானொரு பேரரசனையும் முற்றிச் செய்த தன் ஒரு போர் வினையால் வென்று புறங்கண்டமை தோன்ற, “ஒருமுற் றிருவ ரோட்டிய வெல்போரோய்” என்றும் கூறினார். “தமிழ் செறித்து” என்றதனால், இருவர் தமிழரல்ல ரென்பது பெற்றாம். ஓட்டிய வெல் போரோய், செருமிகு தானை வெல்போரோய் என இயையும். தெரியல் சூடி, தமிழ் செறித்து, சீறி, இருவரோட்டிய வெல்போரோய் என்றது, சேரமானது போர்வன்மை விளக்கி நின்றது. சிறிய விலை சிறியிலை யென நின்றது. இது கடைக்குறை யென்பர் பழைய வுரைகாரர். தமிழ்செறித்தென்றது, “மாற்றாரது தமிழ்ப் படை யெல்லாம் இடையறப்படுத்தி” யென்றும், “ஒரு முற்று ஒரு வளைப்பு” என்றும் “இருவர் சோழனும் பாண்டியனும்” என்றும், “இருவரை யென்னும் உருபு விகாரத்தால் தொக்கது” என்றும் பழைய வுரைகாரர் கூறுவர். சேரர் படையும் தமிழ்ப்படை யாதலின், சோழ பாண்டியர் படையைமட்டில் தமி்ழ்ப்படையெனல் பொருந்தாமையாலும், செறித்து என்றற்கு இடையறப்படுத்தி என்பது பொருளன்றாதலானும் பழையவுரை பொருந்தாமை யுணர்க. பழைய வுரைகாரர் கூறுவதே பொருளாயின், செறித்தென்பதன்றி, தமிழ்செறுத்தென்பது பாடமாதல் வேண்டும். அவ்வாறு பாடமின்று. தமிழ் வேந்தரிடையே நிகழும் போரிற் செறியும் தமிழ்வீரரை, “தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து” (புறம். 19) என்று சான்றோர் கிளந்தோதுப, “அருந்தமி ழாற்ற லறிந்தில ராங்கென” (சிலப். 26 : 161) என்றும், “தென்றமி ழாற்றல், அறியாது மலைந்த வாரிய வரசரை” என்றும் சேர வேந்தர் தம்மைத் தமிழரென்றே கூறுதல் காண்க. இனி, “ஒள்வாள் செருமிகு தானை வெல்போ ரோயே” என்றது, சேரமானது தானைச்சிறப்பை யுணர்த்துகின்றது. விற்படை சேரர்க்கே சிறப்பாக வுரியதாயினும், ஒள்ளிய வாளேந்திச் செய்யும் போரினும் இத்தானை சிறப்புற்றுப் பல போர்களில் வென்றி மேம்பட்டதென்றற்கு, “ஒள்வாள் செருமிகு தானை” யென்றார். 13 - 15. ஆடு பெற்று .................. வென்றோய். உரை : ஆடுபெற்றழிந்தமள்ளர் - பிற வேந்தர்க்குப் படை வீரராயிருந்து பல போர்களில் வெற்றிபெற்றும் நின்னொடு பொருது வீறழிந்த வீரர் ; மாறி - பகைவ ரிடத்தினின்றும் மாறி நின் தாணிழல் விழைந்து போந்து ; நீ கண்டனையேம் என்றனர் - நீ கருதியதனையே யாமும் கருதியொழுகும் கருத்துடையே மாயினேம் என்று சூள் மொழிந் தமைந்தனர் ; நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் - நீயும் நும் குலத்தோர்க்குச் சிறப்பாக வுரியவாகிய வன்மையும் கண்ணோட்டமும் கொண்டு மேலும் பல போர்களில் வென்றி சிறந்தாய் எ - று |