பெற்று என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அழிந்த என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. முன்னைப் போர்களில் ஆடுபெறுதற் கேதுவாயிருந்த தோள்வலி நின்னொடு பொரற்கு ஆற்றாமையின், மள்ளர் வீறழிந்தன ரென்பார், “ஆடுபெற்றும் அழிந்த மள்ளர்” என்றும், அழிந்த வீற்றினை மறுவலும் பெற விழைவதே வீரர்க்குக் குறிக்கோளாதலாலும், அதனைப் பெறற்கு அரணும் துணையுமாகும் பெருவிறலுடையார் வழிநின்று வாழ்வதையே வாழ்க்கையாகக் கருதுபவாதலாலும், “மாறி நீ கண்டனையேம் என்றனர்” என்றும், தாம் பகையிடத்திருந்து மாறுகின்றமையின், தம் நினைவு சொல் செயல்களைத் தலைமகன் அயிராமைப் பொருட்டுச் சூளுறவு முதலியன செய்தமை தோன்ற, “நீ கண்டனையேம் என்றனர்” என அவர் கூற்றைக் கொண்டெடுத்துங் கூறினார். நீ கண்டனையேம் என்றது, “யான் கண்டனைய ரென்னிளையரும்” (புறம். 191) என்றாற்போல வந்தது. இடைக்காலத்தில் இவ்வாறே வீரர்கள் சூளுறவு செய்த செயல்களைத் திருக்கோயிலூர் வட்டத்து எலவானாசூர் முதலிய இடங்களிற் காணப்படும் கல்வெட்டுக்கள் (A. R. No. 500 of 1937 38) கூறுகின்றன. அம்மள்ளரது வினைத்தூய்மையும் மேலும் பல போர்களைச் செய்து அறிந்தாளும் சேரனது ஆட்சித்திறமும் தோன்ற, “நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோ” யென்றார். இனிப் பழையவுரைகாரர், “ஆடுபெற்றழிந்த மள்ளரென்றது, முன்பு பிறரொடு பொருது வென்றி பெற்றுப் பின் நினக்கு அழிந்த மள்ளரென்றவா” றென்றும், “மாறி யென்றது நின்னொடு கைம்மாறி யென்றவா” றென்றும், “நீ கண்டனையே மென்றது, இன்றுமுதல் நின்னாலே படைக்கப்பட்டாற் போல்வே மென்றவா” றென்றும் கூறுவர். நுகம், வன்மை மேற்றாயினும், அதற்கு அழகுதரும் கண்ணோட்டத்தையும் அகப்படுத்து நின்றது பழையவுரைகாரரும், “நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகம்” என்பது காண்க. நுக மென்றற்கு வலியென்றே கொண்டு, நுங்கள் படைக்கு வலியாகக் கொண்டெனினுமையும். நுகம் வலிமைப் பொருட்டாதலை, “வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேலெழினி” (குறுந். 80) என ஒளவையார் கூறுமாற்றாலறிக. 15 - 21. அதனால் ................ பலவே. உரை : அதனால் - இன்ன இயல்புகளையுடையை யாதனால்; சேரலர் மருக - சேரர்குடித் தோன்றலே ; செல்வக் கோவே செல்வக் கடுங்கோவே ; கால் எடுத்த திரை முழங்கு குரல் வேலி நனந்தலை உலகம் - காற்றால் சுருட்டப்பட்ட அலைகள் முழங்கும் முழக்கத்தையுடைய கடலைச் சுற்றெல்லையாகவுடைய அகன்ற உலகத்தே வாழும் நன்மக்கள் ; செய்த நன்று உண்டெனின் - செய்த அறம் நிலைபெறுவ தென்றால் ; வாழியாத - செல்வக்கடுங்கோ வாழியாதனே ; அடையடுப்பு அறியா அரு வி ஆம்பல் - இலையடுத்தலை யறியாத பூவல்லாத ஆம்பலென்னும் எண்ணும், பல ஆயிர வெள்ள வூழி - பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ளமென்னும் எண்ணும் ஆகிய ஊழிகள் ; வாழிய - நீ வாழ்வாயாக எ - று. |