அதனால் என்பது, “சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் ; அதனால் கொண்டா னுவக்கும்” என்புழிப் போலும் சுட்டு முதலாகிய காரணக் கிளவி. இயல்பு பலவற்றையும் தொகுத்து “அதனால்” என்றதும், ஆசிரியர் உள்ளம் அவற்றையுடைய செல்வக் கடுங்கோவை வாழ்த்துதற்கு விழைந்தமையின், “செல்வக் கோவே சேரலர் மருக” என்று சிறப்பித்தும், உலகம் சான்றோர் செய்யும் அறத்தால் நிலைபெறுகிறதென்பது உண்மையாயின், அவர் நெறிநின்றொழுகும் நீயும் நிலை பெறுக என்பார், “நனந்தலை யுலகம் செய்தநன் றுண்டெனின்” என்றும், “அரு வி யாம்பல் ஆயிர வெள்ள வூழி, வாழி யாத வாழிய பலவே” யென்றும் கூறினார். இவ்வாறே, “இவ்வுலகத்துச், சான்றோர் செய்த நன்றுண் டாயின், கொண்டன் மாமழை பொழிந்த, நுண்பஃறுளியினும் வாழிய பலவே” (புறம். 34) என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆசிரியர் ஆலந்தூர் கிழார் வாழ்த்துவதும் காண்க. அடை, இலை. ஆம்பலென்னும் எண்ணுப் பெயர்க்கு “அடையடுப்பறியா அருவியாம்பல்” என்பது வெளிப்படை. அரு வீ என்பது அரு வி யெனக் குறுகிற்று ; இஃது “அருங்கேடன்” (குறள். 210) என்புழிப் போலப் பூவல்லாத என்பதுபட நின்றது அருமை, இன்மை குறித்து நின்றது. இனிப் பழைய வுரைகாரரும், “அருவி யாம்ப லென்றது வீ அரிய எண்ணாம்ப லென்றவா” றென்றும், “வீ யென்பது குறுகிற்” றென்றும், “அருவி, பண்புத் தொகை” யென்றும், “அடையடுப்பறியா அரு வி யாம்பல் எனக் கூறிய இச் சிறப்பானே இதற்கு அருவியாம்ப லென்று பெயராயிற்” றென்றும், “பல ஆம்பலென மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர். இதுகாறும் கூறியவாற்றால், செல்வக் கடுங்கோ வாழியாத, நீ பார்ப்பார்க்கல்லது பணிபறியலை ; நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலை ; அகலம் மகளிர்க்கல்லது மலர்ப்பறியலை ; கிளந்த சொல் பொய்ப்பறியலை ; வெல்போரோய் ; வென்றோய் ; அதனால், சேரர் மருக, செல்வக் கோவே, வாழியாத, சான்றோர் உலகத்துச் செய்த நன்றுண்டெனின் ஆம்பலும் பல வெள்ளமுமாகிய வூழிகள் வாழிய என வினை முடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “நீ பணிபறியலை, கண்ணஞ்சலை, நின் அகலம் மலர்ப்பறியலை, பொய்ப்பறியலை ; இவை நின்னியல்பு ; இவையேயன்றி வெல்போரோய் முன் பிறர்பால் வெற்றி பெற்று நினக்கு அழிந்த மள்ளர் நின்னொடு பகைமாறி, நீ கண்டனையே மென்று தாழ்வு கூற, அதற்கேற்ப நீயும் நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகம், கொண்டு இன்னும் வென்றிகூர்ந்தனை ; நின் குணங்கள் இவ்வாறாகிய அதனானே, செல்வக் கோவே, சேரலர் மருகனே, வாழியாதனே, உலகம் செய்த நன்று உண்டெனில், பல ஆம்பலாகிய ஆயிரவெள்ளவூழி வாழ்க என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்றும், “வாழியாத வென்னும் விளி செல்வக்கோவே என்பது முதலிய விளிகளின்பின் நிற்க வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் கூறுவர். “இதனாற் சொல்லியது ; அவன் பல குணங்களையும் ஒருங்குகூறி வாழ்த்தியவாறாயிற்று”. |