எழுதியுள்ளனர் ; ஆதலால் இங்கே கபிலரைப் பற்றி மேலும் கூறுவது மிகை. இந் நூலின் ஏழாம்பத்தில் கபிலர், செல்வக் கடுங்கோவாழியாதனைத் தாம் பாடி வந்ததற்குக் காரணம் கூறுவார், “மலர்ந்த மார்பின் மாவண்பாரி, முழவு மண்புலர இரவலர் இனைய, வாராச் சேட்புலம்படர்ந்தான் அளிக்கென, இரக்குவாரேன் எஞ்சிக்கூறேன்,” என மொழிந்து, ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலும்நின், நல்லிசைதர வந்திசினே என்று கூறுகின்றார். பிறிதோரிடத்தில், செல்வக் கடுங்கோவின் பகை கடிந்து விளங்கும் பண்பினை வியந்து, “மாயிரு விசும்பின் பன்மீனொளிகெட, ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார், உறுமுரண் சிதைத்த நின் நோன்றாள் வாழ்த்திக் காண்குவந்திசின்” என்று பாடுகின்றார். சேரமானது சிறப்பு அவன் தேவியின் கற்பு மாண்பால் கவின்மிகும் குறிப்பை, “காமர் கடவுளு மாளுங் கற்பின், சேணாறு நறுநுதல் சேயிழை கணவ” என்று சிறப்பிக்கின்றார். நேரிமலையில் காந்தட்பூ மலர்ந்திருப்ப, அது கடவுள் விரும்பும் பூவாதலின் அதனை மொய்த்தலாகாது எனக் கருதி நீங்குதற்குரிய வண்டு நீங்காது அதன்கட் படிந்து தேனுண்ட வழிச் சிறகு பறத்திற்கியலாது வருந்துமென. இவர் கூறுவது “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்” என வரும் திருமுருகாற்றுப்படையை நினைப்பித்து இன்புறுத்துவதாகும். செல்வக்கடுங் கோவின் ஆட்சி நலத்தைக் கூற விரும்பிய கபிலர், வேந்தே நின் முன்னோர் இந் நாட்டைச் சிறப்புற ஆண்டனர் என்ப; அவர்கள் அவ்வாறு மேம்பட்டதற்குக் காரணம் அவர்கள் நி்ன்னைப்போல் அசைவில்லாத கொள்கையுடையராய் இருந்தமையே என்பாராய், “கொற்ற வேந்தே, நின்போல் அசைவில் கொள்கையராகலின் அசையாது, ஆண்டோர் மன்றஇம் மண்கெழு ஞாலம், நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணிய, பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, விசும்பு மெய்யகலப் பெயல்புர வெதிர, நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த, இலங்குகதிர்த் திகிரி முந்திசினோரே” என்று பாராட்டியுள்ளார். முடிவில் அவனை வாழ்த்தலுற்ற கபிலர், வேந்தே, வேள்வியால் கடவுள் அருத்தினை; கேள்வியால் உயர்நிலை யுலகத்து ஐயரை இன்புறுத்தினை; புதல்வரால் முதியரைப் பேணித் தொல்கடன் இறுத்தனை; ஆகவே, “அயிரை நெடுவரை போலத் தொலையாதாக நீ வாழும் நாளே” என வாழ்த்துகின்றார். இவ்வாறே இவர் கூறும் இயற்கை நலங்களையும் பிறவற்றையும் கூறின் பெருகும். அரிசில்கிழார் : இச்சான்றோரது இயற்பெயர் தெரிந்திலது. அரிசில் என்பது சோழநாட்டு ஊர்களுள் ஒன்று. இவ்வூரருகே காவிரியினின்றும் பிரிந்து சென்ற ஒரு கிளை அரிசிலாறு என வழங்குவதாயிற்று. இச் சான்றோர் இவ்வூர்க்கு உரியராய்க் கிழார் என்ற |