துறை : பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : நாண்மகிழிருக்கை. 1 - 5. எறி பிணம் .............. செல்வ. உரை : மலைத்த தெவ்வர் - எதிர்த்துப் பொருத பகைவருடைய ; மறம்தப - வீரம்கெட ; பரியுடை நன்மா - விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைகள் ; எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின - படைகளால் எறியப்பட்டு வீழ்ந்த வீரர் பிணங்களை இடறிக்கொண்டு செல்லுதலால் சிவந்த குருதிக் கறை படிந்த குளம்பினை யுடையவாக ; விரியுளை சூட்டி - அவற்றின் தலையிலே விரிந்த தலையாட்டத்தை யணிந்து செலுத்தி ; கடந்து - பகைவரை வஞ்சியாது எதிர்பொருது வென்ற ; காஞ்சி சான்ற வயவர் பெரும - காஞ்சித்திணைக் கமைந்த வீரர்க்குத் தலைவனே ; வில்லோர் மெய்ம்மறை - வில் வீரராகிய சான்றோர்க்கு மெய்புகு கருவி போன்றவனே ; சேர்ந்தோர் செல்வ - அடைந்தோர்க்குச் செல்வமாய்ப் பன்படுபவனே எ - று. தெவ்வர் மறத்தைத் தபுக்கவேண்டிக் குதிரைகட்கு விரியுளை சூட்டிச் செலுத்துபவாதலின், தெவ்வர் மறந்தப, செம்மறுக் குளம்பினவாக விரியுளை சூட்டிக் கடந்த என இயைக்கப்பட்டது. முன்னே செல்லும் தூசிப்படைக்கு ஆற்றாது எறியுண்டு வீழ்ந்த பகைவீரர் பிணத்தை, “எறிபிண” மென்றும், அப் பிணக்குவையைக் கடந்துசென்று மேல் வரும் பகைவரை யடர்க்கின்றமை தோன்ற, “இடறிய செம்மறுக்குளம்பின” என்றும் கூறினார். ஆக வென்பது |