வருவிக்கப்பட்டது. ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியும் நன்கு கற்ற குதிரை யென்றற்கு “பரியுடைமா” என்னாது. “பரியுடை நன்மா” என்று சிறப்பித்தார் பிணக்குவை கண்டு மருளாது அதனை யிடறிச் சேறற்கு வேண்டும் போர்வேட்கை மிகுவிப்பதாகலின், உளை சூட்டின ரென்பார், “விரியுளை சூட்டி” யென்றார். குதிரைக்கு விரியுளை சூட்டியது போரில் வேட்கை பிறத்தற்பொருட்டெனப் பழைய வுரைகாரரும் கூறுவது காண்க. “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும், நில்லா வுலகம் புல்லிய நெறித்தே” (தொல். பொரு. புறத். 23) யென்பவாகலின், புகழொன்றே நிலைபெறுவதன்றிப் பிறவுடம்புமுத லனைத்தும் நிலைபேறுடைய வல்லவெனும் கருத்துடைய உயர்வீரர் என்றற்கு, “காஞ்சி சான்ற வயவர்” என்றும், அவர்க்குத் தலைவனாதலின், “பெரும” வென்றும் கூறினார் வீரரென்னாது, வயவர் என்றமையின், முன்னே பல போர்களைத் திறம்படச் செய்து சிறப்பும் வெற்றியும் சிறக்கப் பெற்றவ ரென்று கொள்க ; இவரையே பிற்காலத்துப் புராணங்கள் கூறும் மூலபல வீரர் எனவறிக. “காஞ்சிசான்ற வயவரென்றது, நிலையாமை யெப்பொழுதும் உள்ளத்திற் கொண்டிருத்தலமைந்த வீரரென்றவா” றென்பது பழையவுரை. செல்வமுடையார்க்கு அதனாற் பயன், சேர்ந்தோர்க் குண்டாகும் துன்பந் துடைத்த லென்ப வாகலின், “சேர்ந்தோர் செல்வ” என்றார் ; “செல்வ மென்பது சேர்ந்தோர், புன்கணஞ்சும் பண்பின் மென்கட் செல்வம்” (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க. 6 - 10. பூணணிந்து .......................... கணவ. உரை : பூண் அணிந்து எழிலிய வனைந்து வரல் இளமுலை - இழை யணிந்த உயர்ந்த ஒப்பனை செய்தாற்போல் வருகின்ற இளமுலையினையும் ; மாண் வரி அல்குல் - மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலினையும் ; மலர்ந்த நோக்கின் - அகன்ற கண்ணினையும் ; வேய் புரைபு எழிலிய வீங்கு இறைப் பணைத் தோள் - மூங்கிலை யொப்ப அழகிய பெரிய மூட்டுக்கள் பொருந்திய (தொடியணிந்த) பருத்த தோளினையும் ; காமர் கடவுளும் ஆளும் கற்பின் - அழகிய கடவுளரையும் ஏவல்கொள்ளும் கற்பினையும் ; சேண் நாறு நறுநுதல் - சேய்மைக்கண்ணும் சென்று மணம் கமழும் நறிய நெற்றியினையும் ; சேயிழை கணவ - செவ்விய அணிகளையு முடையாட்குக் கணவனே எ - று. எழில், உயர்ச்சி, “நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம்” (குறள். 407) என்புழிப்போல. பூண் முத்துமாலை முதலியன சாந்து முதலியன அணிந்து தொய்யி லெழுதி ஒப்பனை செய்யப்படுமியல்பு பற்றி, “வனைந்துவர லிளமுலை” யென்றார். இனி, பழைய வுரைகாரர், “வனைந்துவர லென்பது ஒரு வாய்பாட்டு விகற்பம்” என்பர். கண் அகன்றிருத்தல் பெண்கட்கு அழகாதலின் “மலர்ந்த நோக்கின்” என்றார். “அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி” (கலி. 108) என்று சான்றோர் கூறுதல் காண்க . கற்புடை மகளிரைத் தெய்வமென்றும், அவர்க்குத் தெய்வமும் ஏவல் செய்யுமென்றும் கூறுபவாதலின், “கடவுளுமாளுங் கற்பின்” என்றார். “இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக், |