கற்புக் கடம்பூண்ட வித்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” (சிலப். 15 : 142 - 4) என்று உயர்ந்தோர் ஏத்துமாறு காண்க . நெடுந்தொலைவு பரந்து மணம் கமழும் இயல்புபற்றிச் “சேணாறு நறுநுதல்” என்றார் ; “தேங்கமழ் திருநுதல்” என்று சான்றோர் சிறப்பித்துக் கூறுப . கற்புச் சிறப்புப்பற்றிச் “சேயிழை கணவ” என்றார். 11 - 12. பாணர் ............................... மார்ப. உரை : பாணர் புரவல - பாண் குடும்பங்களைப் புரப்பவனே ; பரிசிலர் வெறுக்கை - பரிசிலர்க்குச் செல்வமாயிருப்பவனே ; பூண் அணிந்து விளங்கும் புகழ் சால் மார்ப - பூணாரமணிந்து விளங்கும் அகன்ற புகழ் நிறைந்த மார்பினையுடையோனே எ - று. பாணரைப் புரத்தலால் இசைத்தமிழ் வளர்ச்சியும், பரிசிலரைப் புரத்தலால் புகழ் வளர்ச்சியும் பயனாதல்பற்றி, “பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை” யொன்றார் ; “வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை” (பதிற். 15) என்று பிறரும் கூறுவது காண்க . விரிந்துயர்ந்திருத்தல் மார்புக்குப் புகழாதலின், “புகழ்சால் மார்ப” என்றார் . அணிந்தென்னும் முதல்வினை சினைவினையாகிய விளங்கிய வென்னும் வினை கொண்டது. 12 - 17. நின் நாண் மகிழிருக்கை ....................... மகிழானே. உரை : தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன் - இனிய இசை தொடுத்தலையுடைய நரம்பினா லமைந்த பாலையாழ் வல்லவனொருவன் ; பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு - அழுகைச் சுவைக்குரிய உறுப்பினையுடைய பாலைப்பண்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மாறிமாறி யிசைத்தாற் போல ; சேறு செய் மாரியின் - சேற்றை யுண்டாக்கும் மழை போல ; நனை அளிக்கும் - கள்ளை வழங்கும் ; சாறுபடு திருவின் - விழாக் களத்தின் செல்வத் தோற்றத்தையுடைய ; மகிழான் திருவோலக்கத்தின் கண்ணே ; நின் நாண் மகிழ் இருக்கை இனிது கண்டிகும் - நின்னுடைய நாட் கால இன்ப விருக்கையினை நன்கு கண்டு மகிழ்வுற்றேம் எ - று. இனிய இசைபயத்தல்பற்றி, “தீந்தொடை நரம்பு” என்றார். பாலை யாழ் வல்லவனன்றிப் பிறரால் அழுகைச் சுவைக்குரிய பாலைப் பண்களை யெல்லாம் தொகுத்து, ஒவ்வொன்றாக மாறி மாறி யிசைக்கு மாற்றால் அழுகைச் சுவையை இசைத்துக் காட்டலாகாமை தோன்ற, “பாலை வல்லோன் பையுளுறுப்பின் பண்ணுப் பெயர்ந்தாங்கு” என்றார். பண்ணொவ் வொன்றிலும் அழுகைச்சுவைக் குரியதாய்த் தனித்தனி சிறந்த உறுப்புக் களுண்மைபோல, களிப்பினைத் தருவதாய் வேறுவேறு சிறந்த கள்வகை யுண்மையாலும், பையுளுறுப்புக்களைப் பாலைவல்லோன் தனித்தனி யிசைத்துக் காட்டுமாறுபோல, தனித்தனியே அக்கள்வகையினை நல்குகின்றானென்றும், ஒவ்வொருவகைக் கள்ளும், சேறுண்டு பண்ணும் |