துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : புதல் சூழ் பறவை. 1 - 3. வாங்கு ........................ இரவல. உரை : வாங்குஇருமருப்பின் - வளைந்த கரியதண்டினையுடைய ; தீந்தொடை பழுனிய - இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த ; இடன் உடைப் பேரியாழ் - இசையின்பத்துக்கு இடமாகவுள்ள பேரியாழிடத்தே ; பாலை பண்ணி - பாலைப் பண்ணை யெழுப்பி ; படர்ந்தனை செல்லும் - சேரனை நினைந்து செல்லும் ; முது வாய் இரவல - முதிய வாய்மையையுடைய இரவலனே எ - று. பேரியாழின் தண்டு நீண்டு வளைந்திருத்தலின், “வாங்கிரு மருப்பின்” என்றார். ஆயிரம் நரம்புகளை எல்லையாக வுடையதாய் இசையாற் பெறலாகும் பேரின்பத்துக்கு இடமாக இருத்தல் பற்றி “இடனுடைப் பேரியாழ்” என்றும், இன்னிசை பயக்கும் நரப்புத் தொடையால் குறைபாடின்மை தோன்ற, “தீந்தொடை பழுனிய” என்றும் கூறினார். இனி, “இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி” யென்று ஈண்டு இவர் கூறியதுபோலவே, ஏனைச் சான்றோரும், “தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி” (பதிற். 46) யென்றும், “விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணி”(பதிற். 57) என்றும் கூறுவதை நோக்கின், இப்பேரியாழ் பாலைப் பண்ணுக்கு ஏற்ற இசைக் கருவியாதல் துணியப்படும். “படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று ; படர்தல் - நினைவு” என்பது பழைய வுரை. “முதுவாயிரவல” |