சிறப்புப்பெற்று வாழ்ந்ததோடு நல்லிசைப்புலமை சிறந்து விளங்கினார்: ஆயினும், சான்றோர் இவர் இயற்பெயரை விடுத்து அரிசில்கிழார் என்ற சிறப்புப்பெயரையே பெரிதெடுத்து வழங்கினமையின், நாளடைவில் இயற்பெயர் மறைந்துபோயிற்று. இப்போது அரிசில் என்ற ஊரும் மறைந்துபோயிற்று. போகவே, இச் சான்றோரது அரிசிலூரை, திருச்சிமாவட்டத்து அரியிலூராகவும், மைசூர்நாட்டு அரிசிக்கரையாகவும் கொள்ளலாமோ என ஆராய்ச்சியாளர் மயங்கலுற்றனர். பூஞ்சாற்றூர் என்பது சோழ நாட்டிற் சங்க காலத்திருந்ததோரூர்; அஃது இடைக்காலச் சோழர் காலத்தும் இருந்தமை கல்வெட்டுக்களால் (A. R. 256 of 1926) தெரிகிறது; இப்போது அது மறைந்து விட்டது. இவ்வாறே அரிசில்கிழாரது அரிசிலூரும் மறைந்ததெனக் கோடல்வேண்டும். அரிசில்கிழார் வையாவிக்கோப்பெரும் பேகனையும், அதியமான் எழினியையும் பாடியுள்ளார். இந்நூலில் எட்டாம்பத்தைப் பாடித் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும் பொறையைச் சிறப்பித்துள்ளார். இவ்விரும் பொறையையும் இவன் காலத்தே இவனைப் பகைத்துக்கெட்ட வேந்தர்களையும் சீர்தூக்கிப் பார்த்த அரிசில்கிழார், இரும்பொறைபால் அறிவும் ஆண்மையும் கைவண்மையும் மிக்குற்றிருப்பது காணுகின்றார்; பகைவர்பால் சூழ்ச்சித் தெளிவும், வினைத்திட்பமும் பொருள்படைகளாற் பெருமையும் இல்லாமையைத் தெரிந்தறிகின்றார். அதனால் அவர்கள் படைகோள் அஞ்சாமல் சூழாது துணிந்து போருடற்றி உயிர்க்கேடும் பொருட் கேடும் உண்டாக்குதலை யறிகின்றார்; போரில் இரும்பொறையின் ஆண்மைத்தீ மடங்கற் றீயினைப்போல் அடங்காது பெருகுதலைக்கண்டு, “மடங்கற்றீயின் அனையை, சினங்கெழு குரிசில் நின் உடற்றிசினோர்க்கே” என்று பாடுகின்றார். பகைவேந்தர் பகைமை நீங்கி இரும்பொறையின் சொல்வழி நில்லாராயின் நாடு எய்தும் கேடு நினைந்து, “பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய, வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து நின் வழிப்படாராயின், ........பாடல் சான்ற வைப்பின், நாடுடனாடல் யாவண தவர்க்கே” என்று தெரிவிக்கின்றார். பகைவர் அறிவுத் துறையில் தெளிவிலராதலை, இனி, இரும்பொறையே தெளிந்து வேண்டுவன செய்தல்வேண்டும் என்னும் கருத்தினராய், “உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி, அறிந்தனை யருளா யாயின், யாரிவண் நெடுந்தகை வாழு மோரே” யென இயம்புகின்றார். போர்தொடுக்கும் பகைவேந்தரது அறியாமைக்கு இரங்கி, அவர்பாற் சென்று, பொறையனுடைய “வளனும் ஆண்மையும் கைவண்மையும், மாந்தர் அளவிறந்தன” எனப் பன்னாள் சென்று தெரிவிக்கின்றார் ; அவ்வழியும் தேறாதாரை, |