யென்பதற்குப் புறநானூற் றுரை காரரும் இவ்வாறே கூறினார். முதுமை அறிவுடைமையாகக் கோடலு மொன்று. 9 - 20. கறுத்தோர் ................. கிழவோனே. உரை : கறுத்தோர் உறுமுரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் - வெகுண்டு மேல் வரும் பகைவரது மிக்க வலியைத் தடுத்தற்குரிய ஒழுங்கினால் அப் பகைவரால் அழித்தற்கரிய படைவகுப்பையும் ; நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் - நாட்காலையிலே மழைக் கூட்டந் தங்கிய மலையுச்சியை யொக்கும் ; தோன்றல் தோல் மிசைத்து எழுதரும் - தோற்றத்தையுடைய பரிசையினை மேலே தாங்கி யெழுகின்ற ; விரிந்து இலங்கு எஃகின் - ஒளி விரிந்து விளங்கும் வேற்படையையும் ; தார் புரிந்தன்ன வாளுடை விழவின் - மாலை யுடலிற் பின்னுவது போல வாள் சுழற்றுகின்ற வாள் விழாவினையுமுடைய ; போர்படு மள்ளர் - போர்க்கண் அன்றிப் பிறவாற்றால் இறத்தலை விரும்பாத வீரர் ; போந்தொடு தொடுத்த - பனங்குருத்துடனே சேர்த்துத் தொடுத்த ; கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்ப - வெற்றித் திரு விரும்பும் வாகையினது துய்யினையுடைய பூப்போல ; பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை - பூத்த பூக்களையுடைய முல்லைப் புதரிடத்தே மொய்க்கும் வண்டினம் ; கடத்திடை பிடவின் தொடைக்குலைச் சேக்கும் - காட்டிலே பிடவமரத்தின் தொடுத்தது போலப் பூக்கும் பூக்குலையிலே தங்கும் ; வான் பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின் - உயரிய பளிங்குடன் விரவிய சிவந்த பரல்கள் கிடக்கின்ற முரம்பு நிலத்திலே ; இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் - அங்கு வாழ்வோர் விளங்குகின்ற ஒளிக் கதிரையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற ; கண் அகல் வைப்பின் - இடம் அகன்ற ஊர்களையுடைய ; நாடு கிழவோன் - நாட்டிற்கு உரிய தலைமகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் எ- று. கறுப்பு, வெகுளி, கறுத்தோர், வெகுண்டுவரும் பகைவரென்பது பெற்றாம். வலி குறைந்தோர்க்கும் வெகுளி யுண்டாயவிடத்து அது சிறிது பெருகிக் காட்டுதலின், கறுத்து வந்தோர் வலியை “உறுமுரண்” என்றார். அவரை எதிரூன்றித் தாங்கும் படையின் வலியெல்லாம் அவரது படையொழுங்கினை அடிப்படையாகக் கொண்டிருத்தல்பற்றி, அதனைத் “தாரருந் தகைப்பு” எனச் சிறப்பித்தார். தார், ஒழுங்கு, தாரால் அரிய தகைப்பினைச் செய்தல்பற்றி இவ்வாறு கூறினார். “தாரருந் தகைப்பு” என்றதற்கு “ஒழுங்குடைய மாற்றாரால் குலைத்தற்கரிய படை வகுப்பு” என்று பழையவுரை கூறும். யானைமேலும் குதிரைமேலும் வரும் வீரர், பகைவர் எறியும் அம்பும் வேலும் தடுத்தற்குத் தம் பரிசையினை (கேடயத்தை) மேலே ஏந்தித் தோன்றும் தோற்றம், மலையுச்சியில் நாட்காலையில் படிந்து தோன்றும் மேகக்கூட்டத்தின் தோற்றத்தை யொத்தல்பற்றி “நாண் மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றல் தோல்” என்றார். சேரனுடைய வீரரேந்திச் |