பக்கம் எண் :

361

செல்லும் வேல்   வாள் முதலியவற்றின் நலங்கூறுவார், “விரிந்திலங்கு
எஃகின்”  என்றார். வாள் விழவின்கண், வீரர் வாளைச் சுழற்றுமிடத்து
உடலெங்கும் ஓடிச் சுழலும் வாள் உடலில் பின்னிக் கிடந்து தோன்றும்
மாலையின்  தோற்றத்தை நல்குவது பற்றி, “தார் புரிந்தன்ன வாளுடை
விழவின்”   என்றார்.  இதனை  இக்காலத்தும்  தொண்டை  நாட்டில்
கலைமகள்  விழா நாளில் வாட்பயிற்சியுடையார் செய்து காட்டும் வாள்
விழாவிற் காணலாம்.

இனிப்    பழையவுரைகாரர், “நாண்மழை” யென்றது, “பருவமழை”
யென்றும், “தோலொடு வென ஒடு விரிக்க” என்றும், “தார் புரிந்தன்ன
வாள்”  என்றது, “பூமாலைகள் அசைந்தாற்போல அடங்குகின்ற வாள்”
என்றும் கூறுவர்.

போரில்     பகைவர்    எறியும்     படை     முதலியவற்றால்
புண்பட்டிறப்பதையே    விரும்புவாராதலின்,    “போர்படு   மள்ள”
ரென்றார்.  “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்
கொள  விளிந்தோர்”  (அகம்.  61)  என மாமூலனார் கூறுதல் காண்க.
போர்ப்படு எனற்பாலது போர்படு என வந்தது. இனி, போரை விரும்பி
அதற்குரிய   நினைவு  செயல்களையுடைய  வீரரென்றற்கு   இவ்வாறு
கூறினாரென்றுமாம்.         தகைப்பினையும்,         எஃகினையும்
விழவினையுமுடைய      மள்ளர்      என்க.      போர்க்கேற்றுவர்
பழையவுரைகாரர்.

சேரர்க்குரிய     போந்தையொடு வெற்றிக்குரிய  வாகைப்பூவையும்
விரவித்தொடுத்த   மாலை   யுடைமைபற்றி,  “போந்தொடு  தொடுத்த
கடவுள்  வாகைத்  துய்வீ”  யென்றார். போந்து, பனந்தோடு, வெற்றித்
திரு  விரும்பும்  பூவாதலின்,  வாகைப்பூவினைக்,  “கடவுள்  வாகைத்
துய்வீ”    யென்றார்.    இனிப்    பழைய    வுரைகாரர்,   கடவுள்
வாகையென்றதற்கு,  “வெற்றி  மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை”
யென்பர்.

போந்தை  வெண்ணிறமாயும் வாகைப்பூ நீல நிறமாயும் இருத்தலின்,
போந்தொடு  தொடுத்த  வாகைப்  பூவிற்கு  முல்லைப்  புதல் சூழ்ந்த
வண்டினத்தையும்  உவமம்  கூறினார்.  வாகைப் பூ நீல நிறமுடைமை
பற்றியும்,   துய்யுடைமை   பற்றியும்   சான்றோர்   அதனை  மயிற்
கொண்டைக்கு  உவமித்து,  “குமரி வாகைக் கோலுடை நறுவீ, மடமாத்
தோகைக்  குடுமியிற்  றோன்றும்”  (குறுந்.  347)  என்றும்,  “வாகை
யொண்பூப்புரையு  முச்சிய  தோகை”  (பரி. 11: 7-8) என்றும் கூறுதல்
காண்க.  “மென்பூ  வாகை”  (அகம்.  136)  என்பதனால்,  வாகைப்பூ
மெல்லிதாதலும்  அறியப்படும்.  இனிப் பழைய வுரைகாரர், “கிழித்துக்
குறுக    நறுக்கி    வாகையோடு    இடை    வைத்துத்   தொடுத்த
பனங்குருத்துமுல்லை     முகைக்கு     ஒப்பாகவும்,       வாகைவீ
அம்முல்லையைச்  சூழ்ந்த  வண்டிற்கு  ஒப்பாகவும்  உவமங்கொள்ள
வைத்த  சிறப்பானே  இதற்குப்  புதல்சூழ் பறவையென்று பெயராயிற்”
றென்பர்.  பறவை,  சேக்கும் முரம்பின் என இயையும். முரம்பிடத்தே
மக்கள்    “இலங்கு   கதிர்த்திருமணி”   பெறுவர்   என்பதற்கேற்ப,
அவ்விடத்தின்  வளம்  கூறுவார், “வாள் பளிங்கு விரைஇய செம்பரல்
முரம்பு”  என்றார்.  பெறூஉம் நாடு என இயைக்க. அதன்கண் வைப்பு
என்பதனைக்    கண்ணகன்    வைப்பு   என   மாறுக.   நாட்டிற்கு
நலஞ்செய்வது  அதன்கண்ணுள்ள  ஊர்களே  யாதலின், “அகன்கண்
வைப்பின் நாடு” என்றார்.