4 - 9. இடி யிசை .............. என்ப. உரை : இடி யிசை முரசமொடு ஒன்று மொழிந்து - இடி முழக்கத்தைப் போன்ற ஓசையினைச் செய்யும் முரசுடனே தப்பாத வஞ்சினத்தைக் கூறிச்சென்று ; ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி - பகைவருடைய வேலேந்திய படைக்கூட்டம் செய்யும்போர் அறக்கெடும்படியழித்து ; கொன்று - அவர்களைக் கொன்று ; புறம் பெற்ற - அஞ்சினோர் முதுகிட்டோடச் செய்ததனாலுண்டாகிய ; பிணம் பயிலழுவத்து - பிணங்கள் நிறைந்த போர்க்களத்தே ; தொன்று திறை தந்த களிற்றொடு - தோற்ற வேந்தர் பழையதாகிய திறையாகத் தந்த யானையோடு ; அம்பண அளவை - நெல்லையளக்கும் மரக்கால் ; விரிந்து உறை போகிய - தன் வாய் விரிந்து அதனைச் சுற்றிலும் புறத்தே யிட்ட செப்புறை தேய்ந்து கழன்றோடுமாறு ; நெல்லின் ஆர்பதம் நல்கும் என்ப - நெல்லாகிய உணவை நிறைய அளந்து கொடுப்பன் என்று அறிந்தோர் சொல்லுவார்கள் எ - று. முரசத்தின் ஓசை இடியோசை போறலின், “இடியிசை” யென்றார். “இடிக் குரல் முரசம்” என்று சான்றோர் பயில வழங்குப. கூறிய வஞ்சினம் தப்பாமற் காக்கும் வாய்மையனாதல்பற்றி, “ஒன்றுமொழிந்” தென்றார் ; “நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே”(பதிற். 63) என்று பிறாண்டும் ஆசிரியர் சேரனது வாய்மையைக் கிளந்தோதியது காண்க. பழைய வுரைகாரர், “ஒன்று மொழிதல் வஞ்சினங்கூற” லென்றும், “ஒன்று மொழிந்து கொன்று புறம் பெற்ற எனக் கூட்டி, ஒன்று மொழிதலும் கொன்று புறம் பெறுதலும் ஒன்னாரதன்றி இவன் தொழிலாக வுரைக்க” என்றும், “ஒன்னாரது குழுவெனக் கூட்டி, கொன்றதும் புறம் பெற்றதும் அக்குழுவையேயாக வுரைக்க” என்றும் கூறுவர். “தொன்று திறை தந்த” என்றதனால், ஈண்டுக் கூறிய வொன்னார், பண்டெல்லாம் சேரனுக்குத் திறை செலுத்திப் போந்த சிற்றரசரென்றும், அத் திறையினைத் தாராமையால் பகைமையுற்ற ஒன்னாராயினரென்றும், அவர் வேலுடைக் குழுவினை இவன் இப்போது வென்று புறம்பெற்று, அவர் செலுத்தவேண்டிய பழந்திறையைப் பெற்றானென்றும் கொள்க பழையவுரைகாரர், “திறை தந்த” என்றதற்கு அவன் ஒன்னார் திறையாகத் தந்தவென வருவித் துரைக்க” என்ப. அம்பணம், மரக்கால், இது மூங்கிலாற் செய்யப்பட்டு வாய் கிழிந்து விரியாவண்ணம் செம்பினால் வாயின் புறத்தே பட்டையிடப்பட்டிருக்கும். இஃது இக்காலத்தும் வடார்க்காடு சில்லாவிலுள்ள சவ்வாது மலையடிவாரத்தே வாழ்வாரிடத்தே வழக்கிலுள்ளது. இதனை யம்பணமென்றும், செப்புப் பட்டையைச் செப்புறை யென்றும் கூறுப. அளக்குந்தோறும் அம்பணத்தின். நிறையப் பெய்து திணித்துத் திணித்து அளத்தலின், வாய்கிழிந்து உறை தேய்ந்து நீங்குமாறு தோன்ற, “அம்பண வளவை விரிந்துறை போகிய” என்றார். போகிய : வினையெச்சம் ; கெட வென்னும் |