துறை : பாணாற்றுப் படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : வெண்போழ்க் கண்ணி. 5 - 12. கொல்படை.....................கொன்று. உரை : கொல் படை தெரிய - ஏந்திய படை யழிந்தவர் வேறு படைகளை ஆராய ; வெல் கொடி நுடங்க - வென்றி குறித்துயர்த்த கொடியானது விண்ணிலே யசைய ; வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப - ஒளிக்கதிர் வீசும் மணி பதித்த கொம்பென்னும் வாச்சியத்தோடு வலம்புரிச்சங்குகள் முழங்க ; பல்களிற்று இனநிரை - பலவாகிய களிறுகளின் கூட்டமான வரிசை ; புலம் பெயர்ந்து இயல்வர - தத்தமக்குரிய இடத்தினின்றும் பெயர்ந்து போர் நிகழும் இடம் நோக்கித் திரிய ; அமர்க்கண் அமைந்த - போரிடுதற் கமைந்த ; நிணம் அவிர் பரப்பில் - பொருது வீழ்ந்த மக்கள் மாக்களினுடைய நிணம் விளங்கும் பரந்த களத்திலே ; குழூஉ - கூட்டமாகிய ; சிறை யெருவை - பெரிய சிறகுகளை யுடைய பருந்துகள் ; குருதி ஆர - பிணங்களின் குருதியை யுண்ண ; தலை துமிந்து எஞ்சிய ஆண்மலி யூபமொடு - தலை வெட்டுண்டதால் எஞ்சி நிற்கும் குறையுடலாகிய ஆண்மை மலிந்தாடும் கவந்தத்தோடு ; உருவில் பேய்மகள் கவலை கவற்ற - அழகிய வடிவில்லாத பேய்மகள் காண்போர் வருந்துமாறு அச்சுறுத்த ; நாடு உடல் நடுங்க - நாட்டிலுள்ளோர் அஞ்சி நடுங்க; பல் செருக் கொன்று - பல போர்களிலும் எதிர்த்தோரை வென்றழித்து எ - று. |