பாடு சால் நெடுவரை - பெருமை யமைந்த நெடிய மலையாகிய ; கல் உயர் நேரிப் பொருநன் - கற்களால் உயர்ந்த நேரிமலைக்குரிய வாழியாதனை ; பாடினை செலின் - பாடிச் செல்குவையாயின் எ - று. காந்தட்பூவைத் தெய்வம் விரும்புதலின் வண்டினம் மூசுதலில்லை யென்பது, “சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்” (முருகு . 43) என்பதனாலும் துணியப்படும். தும்பி மாறாது ஊதியதற்கு ஏது கடிய சிறகுகளையுடைமைபற்றி யெழுந்த செருக்கே யென்றற்குக் “கடும்பறைத் தும்பி” யென்றார். நசைத்தாய்அய், நசைத்தாதலாலே, தும்பி மாறாது ஊதியதனால் எய்திய பயன் இதுவென்பார், “பறை பண்ணழியும்” என்றார். பண், பறத்தற்குரிய இயல்பு; அஃதாவது, பறத்தற்கேற்பச் சிறகுகள் அசைந்து கொடுத்தல். இனி, காந்தள், வேங்கை, சண்பகம் (சம்பை) முதலிய பூக்களில் தும்பியினம் படிந்து தாதுண்ணா வென்றும், உண்டால் சிறகுகள் உதிர்ந்துவிடும் என்றும் நூலோர் கூறுதலின், “பறை பண்ணழியும்” என்றாரென்றுமாம். பாடு, பெருமை. இனிப் பழைய வுரைகாரர், மாறாதூதிய வென்றது, “இது சூரியனுடையதென்று அறிந்தும் நீங்காது ஊதிய வென்றவா” றென்றும் “சூர் நசைத்தா யென்றதனைச் சூர் நசைத்தாக வெனத் திரித்துக் காந்தள் சூரானது நச்சுதலையுடைத் தாகலானே யென வுரைக்க” என்றும் கூறுவர். மலர்ந்த காந்தளைச் சூர் நச்சுதலால் ஊதலாகாதென்று அறிந்து மாறாது தும்பி கடும்பறைச் செருக்கால் ஊதித் தன்பறை பண்ணழியும் என்றதனால், செல்வக் கடுங்கோ வாழியாதன் கண்டு விரும்பிக் காக்கப்படுதலால் நேரி மலையைப் பகைவேந்தர் வலியுடையே மென்னும் செருக்கால் கொள்ளக் கருதி முயல்வ ராயின், அவ்வலி யிழந்து கெடுவரென்பது வலியுறுத்தவாறாம். 1 - 4. கொடு மணம் ................ பெறுகுவை. உரை : கடன் அறி மரபின் கைவல் பாண- இசை வல்லோர்க்குரிய கடமைகளை நன்கறிந்த முறைமையால் யாழ் வாசித்தலில் கைவன்மை வாய்ந்த பாணனே ; நெடுமொழி ஒக்கலொடு - நெடிய புகழ்பெற்ற நின் சுற்றத்தாருடனே ; கொடுமணம் - கொடுமணமென்னு மூரிடத்தும் ; பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் - பந்தரென்னும் பெயரையுடைய பெரிய புகழையுடைய பழையவூரிடத்தும் ; பட்ட - பெறப்படுவனவாகிய ; தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுவை - தென்கடலில் எடுக்கப்படும் முத்துக்களோடு நல்ல அணிகலங்களையும் பெறுவாய் எ - று. யாழ் இசைத்தற்கு வேண்டும் நெறிமுறைகளை நன்கறிந்து இசைப்பவனே யாழ்வல்லோ னாதலால், “கடனறி மரபின் கைவல் - பாணர் என்றார். “கைவல் பாண்மகன் கடனறிந் தியங்க” (சிறுபாண். 37) என்று பிறரும் கூறுதல் காண்க . தமது கைவன்மையால் அரசர் முதலாயினார்பால் |