இல்லையென்று உண்ணாது கழித்த நாட்கள் பல கழியவும்; நெஞ்சு புகல் ஊக்கத்தர் - தம் நெஞ்சம் போரே விரும்புதலால் எழுந்த ஊக்கத்தையுடையராய் ; மெய் தயங்கு உயக்கத்து இன்னார் - உடல்வலி குன்றி அசைவுற்று மெலியும் மெலிவினையுடைய பகைவரது ; உறையுள் தாம் பெறின் அல்லது - உறைவிடத்தைத் தாம் வென்று கைக்கொண்டாலன்றி எ - று. வெவ்வரி யென்புழி வெம்மை வேண்டற்பொருட்டு, விரிக்கப்படுவது வரியாயிற்று ; வரித்தல் கோலம் செய்தல் ; ஈண்டு ஓவியத்தின் மேற்று ; “ஓவுறழ் நெடுஞ் சுவர்” (பதிற். 68) எனப் பின்னரும் கூறுப. நாள் பல கழியினும் பொலிவு குலையாவண்ணம் எழுதப்பட்டமை தோன்ற, “நிலைஇய” என்றார். எயிலெறிந்தல்லது உணவுண்ணேம் என வஞ்சினம் மொழிந்தமையின், அம்மொழி தப்பாவண்ணம் பகைவர் மதிலை முற்றிநிற்றலின், “எயிலெறிந்தல்லது உண்ணாதடுக்கிய பொழுது பல கழிய” என்றார். பிறரும், “இன்றினிது நுகர்ந்தனமாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில்கடந்தல்லது, உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக், கண்ணி கண்ணிய வயவர்” (பதிற். 58) என்று கூறுதல் காண்க. இழைத்த வஞ்சினம் தப்பாமை முடித்தற்கு நாள் பல கழிந்தனவாயினும், தலைநாளிற்போல ஊக்கம் சிறிதும் குன்றாமை தோன்ற, “உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய நெஞ்சுபுகலூக்கத்தர்” என்றார். கழியவும் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. ஊக்கத்தர் ; முற்றெச்சம். இனி, பழையவுரைகாரர், “எயிலெறிந்து என்ற எச்சத்திற்கு உண்ணாது என்றது இடமாக உண்டடென வொருதொழிற் பெயர் வருவித்து முடிக்க” என்றும், “உண்ணாது என்றதனை உண்ணாமலெனத் திரித்து, அதனை அடுக்கிய வென்றும் வினையொடு முடித்துக் கழிய வென்றதனைக் கழியாநிற்க வென்னும் பொருளதாக்கி, அதனைப் பெறினென்னும் வினையொடு முடிக்க” என்றும், “ஊக்கத்த ரென்றது வினையெச்ச” மென்றும் கூறுவர். தயங்குதல், அசைதல், மெய் தயங்கு உயக்கமாவது ஓய்வின்றிப் பொருதலால் மெய் வலி குன்றுதலால் உண்டாகும் அசைவுக்குக் காரணமாகிய மெலிவுநிலை. இதனை ஓய்ச்சலென்றும் கூறுப. “தும்பை சான்ற மெய் தயங் குயக்கத்து” (பதிற். 79) என்று பிறரும் கூறுதல் காண்க. இவ்வண்ணம் பெறும் உயக்கத்தை யெய்துபவர் இன்னாமை யெய்துத லியல்பாதலால், அஃதெய்திநிற்கும் பகைவரை “இன்னார்” என்றார். உயக்கத்து இன்னார் என்பதனால், உயக்கத்தால் இன்னாமை யடைந்திருக்கும் பகைவரென்பதும், அவரை அன்னராக்கு முகத்தால் அவர் உறையும் இடத்தை வென்றுகோடலும் பெற்றாம். பெறவே, அவ்வுறையுளைப் பெற்ற வீரர் அவ்விடத்தே இரவினும் பகலினும் எப்போழ்தினும் பகைவரது தாக்குதலை யெதிர்நோக்கியே இருக்குமாறும் பெற்றாம். இன்னாருறையுள் பெறினல்லது, “இன்னகை மேய பல்லுறை பெறுபகொல்” என்பதனால், பெரும்பான்மையான நாட்கள் இன்னாருறையுள் பெறுதலிலேயே வீரர் கழித்தலை யறிக. |