பக்கம் எண் :

373

9 - 14. வேந்தூர் .......... பெறுப கொல்.

உரை : வேந்தூர்யானை  வெண்கோடு  கொண்டு - பகைவேந்தர்
எறிப்போந்த   களிற்றினைக்  கொன்று  அதன்  மருப்பினைக்  கைக்
கொண்டு   ;   கட்கொடி   நுடங்கும்   ஆவணம்  உடன்  புக்கு -
கள்ளுக்கடையின்   கொடி   யசைந்து   தோன்றும்  கடைத்தெருவை
உடனடைந்து   ;  அருங்  கள்  நொடைமை  தீர்ந்தபின்  -  அரிய
கள்ளுக்கு  விலையாகத்  தந்து  அக்  கள்ளைப் பெற்றுண்ட பின்பு ;
மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு ; நாமம் அறியா ஏமவாழ்க்கை வடபுல
வாழ்நரின்     -    அச்சத்தை    யறியாத    இன்பமே    நுகரும்
வாழ்க்கையையுடைய  உத்தரகுருவில்  வாழும்  மக்களைப்  போல  ;
பெரிது  அமர்ந்து - மிக்க விருப்பமுற்று ; அல்கலும் இன்னகை மேய
பல்    உறை    பெறுபகொல்    -   நாடோறும்   இனிய  உவகை
பொருந்தியுறையும்  பொழுதுகள் பலபெறுவார்களோ ; பெறுதல் அரிது
போலும் எ - று.

போரில்லாக்   காலத்தே சேரனுடைய வீரர் காலங் கழிக்கும் திறம்
கூறுவார்,  நாடோறும் அவர்கள் பகைப்புலத்தே பகைவேந்தர் ஊர்ந்து
வரும்     களிற்றினைக்     கொன்று,     கொணர்ந்த    அவற்றின்
வெண்கோடுகளைக்  கள்ளிற்கு  விலையாகத்  தந்து, கள்ளைப் பெற்று
மகிழ்வது கூறுவார், “வெண்கோடு கொண்டு ஆவணம் புக்கு அருங்கள்
நொடைமை  தீர்ந்தபின்  மகிழ்  சிறந்து”  என்றார்.  வெண்கோட்டுக்
களிறுகளில்  சிறப்புடையவற்றையே  வேந்தர் ஊர்ந்து செல்பவாதலின்
அச்   சிறப்புடைமை   தோன்ற,  “வேந்தூர்  யானை  வெண்கோடு”
என்றார்.   கள்ளுக்கடையில்   கொடிகட்டி   வைத்தல்  இக்காலத்திற்
போலப் பண்டைக்காலத்தும் உண்மை யறிக ; “நெடுங்கொடி நுடங்கும்
நறவுமலி  மறுகில்”  (அகம்.  126)  என்று  பிறரும்  கூறுப.  உயர்ந்த
கோடுகளைத்   தந்தல்லது   பெறலாகாமை   தோன்ற,   “அருங்கண்
ணொடைமை”  யென்றார்.  எனவே,  கள்ளினது  இனிப்பும் களிப்பும்
கூறியவாறாயிற்று.  கட்கடைக்கு வீரர் தம் தோழரோடன்றித் தனித்துச்
செல்லா  ரென்றற்கு  “உடன்  புக்கு”  என்றார். “மதனுடை வேழத்து
வெண்கோடு    கொண்டு,   பொன்னுடை   நியமத்துப்  பிழிநொடை
கொடுக்கும்” (பதிற். 30) என்று பிறரும் கூறுதல் காண்க.

வடபுலம்    என்றது உத்தரகுரு வெனப்படும் ; அங்கு வாழ்வோர்
பகை  முதலிய  காரணமாகப்  பிறக்கும் அச்சம் யாதுமின்றி இன்பமே
துய்த்திருப்பவென்பவாகலின்,  “நாம  மறியா வேம வாழ்க்கை, வடபுல
வாழ்நரின்” என்றார் பழையவுரைகாரரும், “நாம மறியா ஏம வாழ்க்கை
யென்றது,    துன்பம்    இடைவிரவின   இன்பமன்றி   இடையறாத
இன்பமேயாய்ச்  சேறலான  வாழ்க்கை  யென்றவா”  றென்றும்,  “இச்
சிறப்பானே  இதற்கு  ஏம  வாழ்க்கையென்று  பெயராயிற்” றென்றும்,
“வடபுலம்,  போக  பூமியாகிய  உத்தரகுரு” என்றும் கூறுவர். இதனை
“அருந்தவங்  கொடுக்குஞ்  சுருங்காச்  செல்வத்து,  உத்தர  குருவம்”
(பெருங். 2:7:140-1) என்று கொங்குவேளிர் கூறுதல் காண்க. இன்னகை :
இனிய   இன்பம்   என்பது   பழையவுரை.   உறை,   ஆகுபெயரால்
உறையும் பொழுதின் மேலதாயிற்று. உறைபெறுதல் அரிது போலும்