பக்கம் எண் :

376

கூட்டுக”   என்றும்,  “வாள்,   வேல்   மா   என  நின்ற  மூன்றும்
ஆகுபெய”ரென்றும் கூறுவர்.

இக்     கூறிய தானையொடு சென்று எதிர்ந்த பகைவரைத் தாக்கி
வென்றி   மிகும்   திறத்தை,   “படுபிணம்  பிறங்க  நூறி”  என்றார்.
பொடிபடுத்த  லென்னும் பொருட்டாய நூறி யென்னும் சொல் ஈண்டுக்
கோறற்   பொருட்டு.   பழையவுரையும்,   “நூறி  யென்பது  ஈண்டுக்
கொன்றென்னும் பொருண்மைத்து” என்றல் காண்க.

போரில்    பட்டு வீழும் பிணங்கள் பெருகி மலைபோலக் குவியப்
பொருதலால்,  பகைவர்  நாடு  குடிவளம்  குன்றிக்  கெடுதலால், தீது
கடிந்து  நன்று  புரக்கும்  வேந்தற்கு, கெட்ட குடியை நலமுறுவித்துப்
பேணுதல்  கடனாதலின், அது செய்த வேந்தனை, “கெடுகுடி பயிற்றிய
கொற்ற  வேந்தே”  யென்றார். “படுபிணம் பிறங்கப் பகைவரை நூறிய
பின்   அப்   பகைவருடைய  கெட்டுப்போன,  குடிமக்களை  அவர்
நாட்டிலே   பயின்று  வாழ்வாராகப்  பண்ணிய”  வென்றும்,  “இனிப்
பகைவருடைய  கெட்ட குடிகளை வேற்று நாட்டிலே பயிலப்பண்ணின
வென்றுமா” மென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

13 - 17. நிலம் ........... முந்திசினோரே.

உரை : நிலம்  பயம்  பொழிய  -   நிலம்  தன்பால்  விளையும்
விளைபொருள்களை  மிக விளைவிக்க ; சுடர் தினம் தணிய வெயிலது
வெம்மை வரம்பிகவாது தணிந்து நிலவ ; பயம் கெழு வெள்ளி ஆநிய
நிற்ப - உலகிற்கு நல்ல பயனைச் செய்யும் வெள்ளி யென்னும்  கோள்
மழைக்குக்  காரணமாகிய ஏனை நாள் கோள்களுடனே சென்று நிற்ப ;
விசும்பு  மெய்யகலப்  பெயர்  புரவு எதிர - வானம் மழை முகில்கள்
நிரம்பப்  பரவி நல்ல மழையைப் பெய்வது காரணமாக இடம் அகன்று
விளங்கவே  மழை  தன்  பெயலால் உலகுபுரக்கும் செயலுற்று நிற்ப ;
நால்வேறு    நனந்தலை    -    நான்காய்    வேறுபட்ட   அகன்ற
திசையிடமெல்லாம்  ;  ஓராங்கு  நந்த - ஒன்றுபோல ஆக்க மெய்த ;
இலங்கு    கதிர்த்    திகிரி    முந்திசினோர்    -    விளங்குகின்ற
அரசவாணையாகிய திகிரியைச் செலுத்திய நின் முன்னோர் எ - று.

தன்பால் விளைபொருளை மிக விளைத்து வழங்குமாறுபற்றி, “நிலம்
பயம்  பொழிய”  என்றும்,  வெயிலது  வெம்மையும்  மழை  முதலிய
காலந்தோறும்  பெய்தலால்  வரம்பிகவாது நிலவுதலாலும், வரம் பிகந்த
வெம்மையே  உயிர்களால்  மிகுதியாகக் கருதப்படு மாதலாலும், “சுடர்
சினம்  தணிய”  என்றும்  கூறினார்.  வெள்ளிக்கோள் உலகுயிர்கட்கு
நலம்  செய்யுமாகலின்,  “பயங்கெழு  வெள்ளி”  யென்றும், அந்நலம்
உண்டாதற்குத்  துணையாகும் ஏனைநாளும் கோளும் இயங்குமிடத்தே
இவ்வெள்ளி நிற்க வேண்டுதலின், “ஆநியம் நிற்ப” என்றும் கூறினார்.
“அழல்  சென்ற  மருங்கின்  வெள்ளியோடாது, மழைவேண்டு புலத்து
மாரி  நிற்ப”  (பதிற்.  13)  என்றும்,  “வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால்
வெள்ளி,  பயங்கெழு  பொழுதோ  டாநிய நிற்ப” (பதிற். 24) என்றும்
சான்றோர் கூறுதல் காண்க.