இனிப் பழையவுரைகாரர், “நிலம் பயம் பொழிய வென்றது, சிலர் அரசு செய்யுங் காலங்களில் மழையும் நீரும் குறைவின்றி யிருந்தும் எவ்விளைவும் சுருங்கவிளையும் காலமும் உளவாம் ; அவ்வாறன்றி நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய வென்றவா” றென்றும், சுடர் சினம் தணிய வென்றது, “திங்கள் மும்மாரியும் பெய்து மழை இடையறாது வருகின்றமையின் சுடர் தினம் தணிந்தாற் போன்ற தோற்ற மென்றவா” றென்றும், “வெள்ளி யென்றது வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி யென்றவா” றென்றும், “பயங்கெழு ஆநிய நிற்க வென்றது, அவ் வெள்ளி மழைக்கு உடலான மற்றை நாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாட்களிலே நிற்க வென்றவா” றென்றும் கூறுவர். ஆட்சி நலம் இல்வழி, மழை யின்மைக்குக் காரணமாகிய நாளும் கோளும் நிலை திரிதலின், விசும்பும் இடம் சுருங்கித் தருமாறுமென்பது பற்றி, “விசும்பு மெய்யகல” என்றும், அதனால் மழை வேண்டுங் காலத்து விளைவு மிகுதிக் கேற்பப் பெய்து உலகுயிர்கட்கு நலம் செய்தலால், “பெயல்புர வெதிர” என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், “விசும்பு மெய்யகல வென்றது, அம் மழை யில்லாமைக்கு உற்பாதமாகிய தூமத்தோற்ற மின்மையின், ஆகாய வெளி தன் வடிவு பண்டையில் அகன்றாற்போலத் தோன்ற வென்றவா” றென்றும், “பெயல்புர வெதிர வென்றது, மழை இவ்வுலகினை யானே புரப்பேனென்று ஏறட்டுக் கொண்டாற்போல நிற்ப வென்றவா” றென்றும் கூறுவர். நாற்றிசையும் தனித்தனி வேறுவே றியல்பினவாதலால், “நால் வேறு நனந்தலை” யென்றும், இயல்பு வேறுபடினும் பயன் விளைதற்கண் ஏற்றத் தாழ்வின்றி ஒன்றுபோல ஆக்கம் எய்தின என்றற்கு, “ஓராங்கு நந்த” என்றும் கூறினார் ; “நாலு திசையும் ஒன்றுபோலே பகையின்றி விளங்க” வென்பது பழையவுரை. பயம் பொழிய, சினம் தணிய, ஆநியம் நிற்ப, பெயல்புர வெதிர, ஓராங்கு நந்த, திகிரி செலுத்திய முந்திசினோர் என ஒரு சொல் வருவித்து முடிக்க. பழையவுரைகாரர், பொழிய என்பது முதல் நந்த என்பது ஈறாக நின்றவற்றை “ஆண்டோர்” (வரி. 12) என்பதனோடு கூட்டி முடிப்பார். 11 - 12. நின்போல்...............................ஞாலம். உரை : நின்போல் மன்ற அசைவில் கொள்கைய ராதலின் - நின்னைப் போல் தெளிவாக மாறாத கொள்கையை யுடையவர்களா யிருந்தமையால் ; இம் மண்கெழு ஞாலம் அசையாது ஆண்டோர் - இவ்வணுச் செறிந்த நிலவுலகத்தை இனிது ஆண்டார்கள் எ - று. நின் முன்னோரினும் நீ கொள்கையால் உயர்ந்தாய் என்பார், நின் போல் என உவமைக்கண் வைத்தோதினார். அவர் வரலாற்றுக் கொள்கைகளையும் நின் கொள்கைகளையும் சீர்தூக்கிக் காணுமிடத்தே அவருடையவற்றினும் நின்னுடைய கொள்கை மேம்பட்டுத் திகழ்கின்றன வென்பார், “மன்ற” என்றார். அசைவு, முதலது திரிபின்மேலும் |