பக்கம் எண் :

379

 

தீஞ்சுனை நீர்மலர் மிலைந்துமதஞ் செருக்கி
உடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக்
 
10கடுஞ்சின வேந்தர் செம்ம றொலைத்த
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப்
பெண்மை சான்று பெருமட நிலைஇக்
 
15கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற்
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை
 
20வணங்கிய சாயல் வணங்கா வாண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்
மாடோ ருறையு முலகமுங் கேட்ப
இழுமென விழிதரும் பறைக்குர லருவி
 
25முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே.
 

துறை : செந்துறைப்பாடாண் பாட்டு.
வண்ணம்  : ஒழுகு வண்ணம்.
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்  : பறைக்குர லருவி.

1 - 5. களிறு ................ நல்வலத்து.

உரை : களிறு கடைஇய தாள் -களிறுகளை நெறியறி்ந்து செலுத்திப்
பயின்ற  தாளினையும்  ;  மா  வுடற்றிய  வடிம்பு  -  குதிரைகளைப்
பொருதற்குச்  செலுத்திப்  பயின்ற  தாள்  விளிம்பினையும்  ;   சமம்
ததைந்த   வேல்  -  பகைவர்  செய்யும்  போரைக்  கெடுத்த  வேற்
படையினையும்  ; கல் அலைத்த தோள் - கல்லொடு பொருது பயின்ற
தோளினையும்  ;  வில் அலைத்த நல்வலத்து - வில்லேந்திப் பொருது
பகைவரை வருத்திய நல்ல வெற்றியினையுமுடைய (வயவர்.11) எ - று.