அதன் வாயிலாக வந்து தொகும் பொருளைப் பாடிவருவோர்க்கு வரையாது வழங்குவதிலும் சிறந்தவன்; “பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வ”மும், “செற்றோர், கொலக்கொலக் குறையாத் தானை”யும் உடையவன்; களிறும் தேரும் புடைவர, தானை மறவர் படைதாங்கிவர, இவன் போர்க்குச் செல்லும் செலவு, பகைவேந்தர்க்கு இன்னாதாயினும், நடுநின்று காண்போர்க்கு இனிய காட்சியாம் என்பார், “கொல்களிறுமிடைந்த பல்தோற் றொழுதியொடு, நெடுந்தேர் நெடுங்கொடி அவிர்வரப் பொலிந்து, செலவு பெரிது இனிது நிற்காணு மோர்க்கே” எனப் புகழ்ந்து பாடுகின்றார். நாளும் போரே விரும்பும் அவன் உள்ளத்தில், அருளும் அறமும் நன்கு நிலவி அப் போர் வேட்கையைச் சிறிது மாற்றுதல் வேண்டுமென ஒருகால் பெருங்குன்றூர்கிழார் விரும்பினார். அதனால் அவன் தங்கியிருந்த பாசறைக்குச் சென்று, “வேறு புலத் திறுத்த வெல்போ ரண்ணல்” என எடுத்தோதி, அவன் நெஞ்சத்தில் அவனைப் பிரிந்து மனையுறையும் அவன் காதலியின் காதல் நினைவைத் தோற்றுவிக்கும் கருத்தினராய், அவளுடைய உருநலங்களை எடுத்துரைத்து, “பெருந்தகைக் கமர்ந்த மென்சொல் திருமுகத்து, மாணிழை யரிவை, காணிய வொருநாள், பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்” என்று இயம்புகின்றார். இவ்வகையால் வேந்தனது போர்வேட்கை மாறிக் காதலிபாற் செல்வது பெருங்குன்றூர்கிழாரது கருத்தை முற்றுவிக்கின்றது. ஒருகால் இவ்விளஞ்சேரல் இரும்பொறை சோழவேந்தன் ஒருவன்பால் மாறச் சினங்கொண்டான். அதனால் தன் தானைத் தலைவரை நோக்கி, “உடனே விரைந்து சென்று பொருது சோழனைக் கைப்பற்றிக் கொணர்ந்து என்முன்னே நிறுத்துக” வெனப் பணித்தான். பணியேற்றுச் சென்ற சேரர் படைக்கு நிற்றலாற்றாமல் சோழன் படைமறவர் தாம் ஏந்திய வேலைப் போர்க்களத்தே எறிந்துவிட்டோடினர்; அக்காலத்து, இளஞ்சேரலிரும்பொறை பணித்த பணியை, “ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான், முத்தைத் தம்மென இட்ட வெள்வேல்” என்றும், கபிலரென்னும் புலவர் பெருமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிச் சிறப்பித்தபோது அவன் அவர்க்கு வழங்கிய வூர்களினும், சோழர் படையிட்ட வெள்வேல் பல என்பார், “நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்பெற்ற ஊரினும் பல”என்றும் குறித்துரைப்பது பெருங்குன்றூர்கிழாரது புலமை நலத்தைச் சிறப்பிக்கின்றது. பிறிதொருகால், அவர் இளஞ்சேர லிரும்பொறையை முதற்கண் கேள்வியுற்றபோது தம் மனத்தெழுந்த கருத்தும், நேரில் அவனைக் கண்டபோது எழுந்த கருத்தும் இவையென எடுத்தோதுவதும், பொறையனது மென்மைப் பண்பை விளக்கற்கு வானியாற்று நீரை எடுத்துக் காட்டுவதும், அவன் பெருவளங்கொண்டு வருநர்க்கு வரையாது வழங்குதலைத் |