களிற்றின்மேலே யிருந்து செலுத்தும் வீரர் அதன் பிடரிக்கண் இருக்கும் கயிற்றிடையே தம் தாளைச் செருகி முன் தாளால் தம் குறிப்பினையுணர்த்திச் செலுத்துப வாதலின், அச் சிறப்புக் குறித்து, அவர் தாளை, “களிறு கடைஇய தாள்” என்றார். குதிரைமேலிருந்து பொரும் குதிரை வீரர், தம் தாளின் அகவிளிம்பால், அவற்றிற்குத் தம் குறிப்பை யுணர்த்திச் செலுத்துப வாகலின், அச்சிறப்பு நோக்கி, “மா வுடற்றிய வடிம்பு” என்றார். வடிம்பு, தாளின் விளிம்பு. “வடிம்பலம்ப நின்ற பாண்டியன்” என்னும் வழக்குண்மை காண்க. வேலும் வாளும் என்றவற்றுள், வேல் சிறந்தமையின் அதனை யெடுத்தோதினா ராகலின், வாள் வன்மையும் கூறியவாறாகக் கொள்க. இனித் தோள்வன்மைக்கு, கற்றூணொடு பொருது மற்பயிற்சி பெற்றுக் காழ்ப்புற்றிருப்பது கூறுவார், “கல்லலைத்த தோள்” என்றார். இவ்வாறு படைவீரர்க்கு வேண்டும் சிறப்பியல்களுள் களி றூர்தல், மாவூர்தல், வேல் வாட்போர், மற்பயிற்சி என்பவற்றைக் கூறி, வில்வன்மை இன்றியமையாமை பற்றி, “வில்லலைத்த நல்வலத்து வயவர்” என்றார். இனி, சமம் ததைந்த வேல் என்றற்கு, “மாற்றார் செய்யும் சமங்கள் சிதைதற்குக் காரணமாகிய வேலென்றவா” றென்றும், “வேலென்றது வேல் வென்றியினை” யென்றும், “கல்லலைத்த தோளென்றது வலியுடைமையால் கல்லை யலைத்த தோள் என்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். இதனால், தாளினையும், வடிம்பினையும், வேற்படையினையும், தோளினையும், வில்லினையு முடைய வயவர் எனக் கூட்டி முடிக்க. 6 - 11. வண்டிசை................பெரும. உரை : வண்டிசை கடாவா - வண்டினம் மொய்த்துப் பாடுதல் இல்லாத ; தண் பனம் போந்தை - தண்ணிய பனையினது ; குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு - குவிந்த அரும்பு போன்ற கூர்மையையுடைய வெள்ளிய பனங்குருத்தோடு ; தீஞ்சுனை நீர்மலர் மிலைந்து - இனிய சுனையிடத்து மலர்ந்த குவளைப்பூ விரவிய கண்ணியைச் சூடி ; மதம் செருக்கி - போர்க்கு வேண்டும் மதம் மிகுந்து ; கடுஞ்சின வேந்தர் - மிக்க சினத்தையுடைய பகை மன்னர் ; உடைநிலை நல் அமர் கடந்து - என்றும் தமக்கே யுடைமையாகப் பெற்ற நிலைமையினையுடைய நல்ல போர்களை வஞ்சியாது பொருதழித்து ; மறம் கெடுத்து - அவருடைய போர்வன்மையைச் சிதைத்து ; செம்மல் தொலைத்த - இறுதியாக அவரது தலைமையினையு மறக் கெடுத்த ; வலம்படு வான்கழல் வயவர் பெரும - வெற்றி பொருந்திய பெரிய கழலணிந்த வீரர்க்குத் தலைவனே எ- று. வெண் தோடு கொண்டு நீர்மலர் மிலைந்து, செருக்கி, கடந்து, கெடுத்து தொலைத்த வயவர் என்று கூட்டி, அவர்கட்குப் பெரும என இயைக்க. வயவர் பெரும என்பதனை ஒரு பெயராக்கிச் சேரமானுக்கே ஏற்றி முடிப்பினுமாம். |