பக்கம் எண் :

381

பனந்தோட்டோடு      குவளைப்பூவை     விரவித்    தொடுத்த
கண்ணியையணிவது   சேரநாட்டு   வீரர்க்  கியல்பாதலால்,  ஈண்டும்
அதனையெடுத்தோதினார். பனங்குருத்தில்

தேனின்மையின் வண்டினம் மொய்த்துப் பாடுதல் இல்லையாதலால்,
“வண்டிசை  கடாவாத்  தண்பனம்  போந்தை”  யென்றும்,  அதனை
அழகிதாகத்  தொடுத்தணிந்தவழி, பூ வென்று கருதி மூசும் வண்டினம்
வறிது மீளாமைப்பொருட்டு, வேறு குவளை, வேங்கை, வாகை முதலிய
பூக்களை   விரவித்   தொடுத்தணியும்   இயல்பினால், “வெண்தோடு
கொண்டு  தீஞ்சுனை  நீர்மலர்  மிலைந்து”  என்றும் கூறினார். பனங்
குருத்தால்  குவிந்த  அரும்புபோல  முடைந்தது ஊசி போலக் கூரிதா
யிருத்தல்பற்றி,  “குவி  முகிழ்  ஊசி  வெண்தோடு”  என்பாராயினர் .
“வட்கர்   போகிய   வளரிளம்  போந்தை,  உச்சிக்  கொண்ட  வூசி
வெண்டோடு” (புறம். 100) என்று பிறரும் கூறுதல் காண்க . தீஞ்சுனை
நீர்மலர்  என்றற்கு  நீலமலர் சிறப்புடைத் தாயினும், குவளைப்  பூவே
போந்தையிற்  றொடுக்கும் பொற்புடைமையால், அது கொள்ளப்பட்டது
.  “வெண்தோட்  டசைத்த வொண்பூங் குவளையர்” (பதிற். 58) என்று
பிறரும்   கூறுப.  போருடற்றுதலும்  அதன்கண்  வெற்றி  பெறுதலும்
தமக்கு   நிலையாகக்   கொண்டு   சிறக்கும்  வேந்தரென்பார், பகை
வேந்தரை,   கடுஞ்சின   வேந்த  ரென்றும்,  “உடைநிலை நல்லமர்”
என்றும்   சிறப்பித்தார்.உடைநிலை   யென்பது,   “உடைப்  பெருஞ்
செல்வம்”  (பழ.  200)  என்பதுபோல  நின்றது  . இவ்வியல்பினரான
வேந்தரையும்   வென்று   அடிப்  படுத்திக்  கொண்டமை  தோன்ற,
“செம்மல்  தொலைத்த” என்றார் . காலிற் கழல் யாப்பு வெற்றி பெரும்
வீரர்க்கே   பெருமை   தருதலின்,  “வலம்படு  வான்கழல்  வயவர்”
என்றாரென   வறிக   .   வென்றி  பெறுதற்குக்  காரணமான சிறந்த
கழலென்பாரு முளர்.

12 - 16. நகையினும்...........................மார்ப.

உரை : நகையினும் பொய்யா வாய்மை - விளையாட்டானும் பொய்
கூறுதலை யில்லாத வாய்மையினையும் ; பகைவர் புறஞ்  சொல் கேளா
-     பகைவர்தம்    புறத்தே    இகழ்ந்து    கூறும்    சொற்களை
ஏறட்டுக்கொள்ளாத   ;   புரைதீர்   ஒண்மை   -   குற்றம்  நீங்கிய
அறிவினையும்  ; பூண் கிளர் மார்ப - பூணார மணிந்த  மார்பினையும்
உடையோய்;  பெண்மை  சான்று  -  நாணம் நிறைந்து ; பெரு மடம்
நிலைஇ  -  பெரிய  மடமென்னும்  குணம் நிலைபெற்று ; கற்பு இறை
கொண்ட - கற்பு நெறிக்கண்ணே தங்கின ; கமழும் சுடர் நுதல் மணம்
கமழும்  ஒளி  பொருந்திய நெற்றியினையுடைய; புரையோள் கணவ -
உயர்ந்தவட்குக் கணவனே எ - று.

பொய்யாமை, அறம் பலவற்றுள்ளும் சிறந்தமை யுணர்ந்து அதனை
விளையாட்டினும்    நெகிழாது   ஓம்பும்   நற்பண்பினை   வியந்து,
“நகையினும்  பொய்யா  வாய்மை”  என்றார். விளையாட்டாகக் கூறும்
பொய்யார்க்கும்   என்றும்   எத்துணையும்   தீமை  பயவாதாயி்னும்
கொள்ளற்பால தன்றெனத் தள்ளி யொழுகுவது வாய்மையாம் என்றற்கு
நகையினும்  பொய்யாமை என்னாது “பொய்யா வாய்மை” என்றாரென
வறிக  .  நகை,  விளையாட்டு  ; “நகையேயும் வேண்டற்பாற் றன்று”
(குறள்.  871.)  பொய்யா  வாய்மை,  பொய்யாமையாகிய  வாய்மை  ;
“பொச்சாவாக் கருவி” (குறள். 53)