பக்கம் எண் :

383

செய்யும்    களவேள்வியால்  வெற்றிக்கடவுட்குப்  பலியூட்டி அதனை
மகிழ்வித்தாய்  ;  உயர்நிலை  யுலகத்து  ஐயர் - வீரருலகத்து வாழும்
சான்றோரை    ;   கேள்வி   இன்புறுத்தினை   -   அவர்   செய்த
வீரச்செயல்களைப்    புலவர்    பாட    இருந்து    கேட்குமாற்றால்
மகிழ்வித்தாய் எ - று.

உயிர்க்கிறுதி      வந்தவிடத்தும்       அறத்திற்      றிரியாக்
கோட்பாட்டையுடையராய்  வேந்தற்கு மெய்ந்நிழல்போலப் பின்சென்று
உறுதியாவன    ஆற்றும்    உள்ளமுடையராதலின்,   “தொலையாக்
கொள்கைச்   சுற்றம்”  என்றார்  .  தம்மாற்  சுற்றப்பட்ட  தலைவன்
செல்வம்   வலி  முதலியன  தொலைந்தவழியும்,  அவனை  நீங்காது
பழைமை  பாராட்டும் பண்பினராதல் பற்றித் தொலையாக் கொள்கைச்
சுற்றத்தார்   எனச்   சிறப்பித்தாரென  வறிக  .  “பற்றற்ற  கண்ணும்
பழைமை  பாராட்டுதல்  சுற்றத்தார்  கண்ணே  யுள  . “ (குறள். 521)
என்று  ஆசிரியர்  கூறுதல்  காண்க  .  வெல்போர ண்ண லாதலின்,
வெற்றி யெய்துந்தோறும் களவேள்வி செய்து கடவுளரை அருத்தினை”
என்றார். “அரசுபட வமருழக்கி, முரசுகொண்டு களம் வேட்ட, அடுதிற
லுயர்புகழ்  வேந்தே”  (மதுரைக்.  128-30) என்று சான்றோர்  கூறுதல்
காண்க. இனி, வேள்வியெனப் பொதுப்படக் கூறினமையின்,  பார்ப்பார்
வேட்கும்   வேள்விக்கும்  துணைபுரிந்து  வேட்பிக்கு  முதல்வனாய்க்
கடவுளரை இன்புறுத்தினை யென்பாரு முளர்.

கேள்வி     யென்புழி,  ஏதுப்பொருட்டாய இன்னுருபு விகாரத்தாற்
றொக்கது  . அறப்போர் புரிந்து உயிர்துறந்தோர் வீரருறையும் துறக்கம்
புகுவராதலின்,  அவர்களை  “உயர்நிலை  யுலகத்  தையர்”  என்றார்.
அவருடைய ஒழுகலாற்றையும் போர்த்திறனையும் புலவர் பாட, பாணர்
இசைக்க, கூத்தர் கூத்தியற்றக் கண்டும் கேட்டும் சிறப்பித்தலால் அவர்
இன்புறுவர்  என்ற  கருத்தால், “கேள்வியின் உயர்நிலை யுலகத்தையர்
இன்புறுத்தினை”  யென்றார்.  இக்கொள்கை  பத்தாம் நூற்றாண்டிலும்
இருந்து  வந்தது என்றற்குத் திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணி
சான்று  பகர்கின்றது  .  இனி,  ஈண்டுக்  கூறிய ஐயரை முனிவராக்கி,
அவருரைத்த மறைகளை யோதுவது அவர்க்கு இன்பம் செய்யுமென்று
கொண்டு, இது கூறினாரென்பாரு முளர்.

20 - 22. வணங்கிய....................................அண்ணல்.

உரை : வணங்கிய    சாயல்  -   நட்பமைந்த   சான்றோர்க்குப்
பணிந்தொழுகும்   மென்மையினையும்   ;   வணங்கா  ஆண்மை -
பகைவர்க்கு  வணங்காத  ஆண்மையினையுமுடைய  ;  இளந்துணைப்
புதல்வரின் - இளந்துணையாகிய மக்களைக்கொண்டு ; முதியர்ப்பேணி
-  முதியராகிய  பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து ; தொல்
கடன்  இறுத்த  -  தொன்றுதொட்ட  தம்  கடமையினை  ஆற்றிய ;
வெல்போர்  அண்ணல் - வெல்லுகின்ற  போரையுடைய  அண்ணலே
எ - று.

தாம்     பிறந்த  குடியின்  நலத்தைப்  பேணும்    நண்பமைந்த
சான்றோர்க்கு  அடங்கியொழுகும்  நல்லாற்றினை “வணங்கிய சாயல்”
என்றார்.