அடங்கியொழுகுமிடத்து மென்மைப் பண்பல்லது பிறிதொன்றும் தோன்றாமையின் “சாயல்” என்றும், வணக்கமில்வழி முதியோரால் தம் தொல்குடிவரவும் தொல்லோர் மேற்கொண்டு சிறந்த தொன்னெறி மாண்பும் உணர்த்தப்படாவாகலின், “வணங்கிய” என்றும் கூறினார். இளையார்பால் தோன்றும் அடக்கம் சிறப்பாதல் பற்றி, அதனை முதற்கண்வைத் தோதினார். இளமையிலே மானத்தின் நீங்கா ஆண்மை நற்குடிப் பிறந்தோர்க்குக் கருவிலே வாய்த்த திருவாதல் தோன்ற “வணங்கா ஆண்மை” யென்றார். வணங்காமைக் கேதுவாகிய ஆண்மை “வணங்கா ஆண்மை” யெனப்பட்டது. ஆடவர் பிறதுறைக்கு வேண்டப்படுதலின், முதியர்ப்பேணும் நல்லறத்தை “இளந்துணைப் புதல்வரின்” ஆற்றினான் என்றார். முதியோர், முதுமை யெய்துமுன் நாடு காத்தற்கு “அறிவு வேண்டிய வழி அறிவு உதவியும் வாள் வேண்டுவழி வாளுதவியும்” (புறம் . 179) துணைபுரிந்தோர் . அவரை முதுமைக்கண் பேணுதல் நன்றியறிதலாகிய பேரறமாகலின், “முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த அண்ணல்” என்றார் . இனி, முதியோ ரென்றது பிதிரர்க ளென்றும், அவர்க்கு, இல்வாழ்வார் செய்தற்குரிய கடன், மக்களைப்பெறுதல் என்றும் கொண்டு, இளந்துணைப் புதல்வர்ப்பேற்றால் முதியராகிய பிதிரர்க்குரிய தொல்கடனை இறுத்தா யென்றும் கூறுப . வேறு சிலர் தாய்மாமன் முதலாயினார்க்குச் செய்யுங் கடன் தொல்கடனென்றும் தந்தையர்க்குச் செய்யுங் கடன் பிதிர்க்கடனென்றும் கூறுவர் . முதுமையுற்ற சான்றோர்க்கும் முனிவரர்க்கும் தாம் பெற்ற இளந்துணை மக்களைத் தொண்டு செய்ய விடுத்தலாகிய செயல் வடநாட்டினும் நிலவிற்றென்பதற்கு இராமாயணமும் பாரதமும் சான்று பகர்கின்றன . மகப்பேற்றால் பிதிர்க்கடன், கழியுமென்னும் வடவர்கொள்கை, தமிழ்நாட்டவர்க்கு இல்லை . திருவள்ளுவர், மகப்பேறு பிதிர்க்கடனிறுக்கும் வாயிலெனக் கூறாமையே இதற்குச் சான்ற கரியாம் தொல்லோர்க்கும் இறுத்தற்குரிய கடனாதலின், தொல்கடன் எனப்பட்டது. இக்காலத்தும் தமிழ்மக்களிடையே முதியோர், இளையோர் மணம்புணர்ந்து தம்பால் வாழ்த்துப் பெறுவான் அடிவீழ்ந்து வணங்குங்கால், “விரைய மக்களைப் பெற்றுத் தருக ; அம் மக்கள் கையால் தண்ணீ ரருந்தினால் எங்கள் உயிர் சாந்திபெறும்” என்று வாழ்த்தும் வழக்க முண்மை இக்கருத்தை வலியுறுத்தும் . இவ் வழக்குச் சேரவேந்தர்பாலும் இருந்ததென்றற்கு, “கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் காசறு செய்யுட் பாடிய பரணர்க்கு, அவன்தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்த செய்தியை இப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகம் கூறுவது போதிய சான்றாகும். இனி, வணங்கிய சாயலையும் வணங்கா ஆண்மையினையும் சேரமானுக்கே ஏற்றி வெல்போர் அண்ணலென்பதனோடு முடிப்பாரு முளர். 23 - 27. மாடோர்....................................நாளே. உரை : மாடோர் உறையும் உலகமும் கேட்ப - தேவர்கள் வாழும் பொன்னுலகத்தும் கேட்கும்படி ; இழும் என இழிதரும் பறைக்குர லருவி - இழுமென்னு மனுகரணமுண்டாக வீழும் பறைபோன்ற முழக்கத்தை யுடைய அருவிகள் ; முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் - மிகப் |