பெரியவாகிய உச்சியினையுடைய முடிகள்தோறும் நிறைந்து விளங்கும் ; அயிரை நெடுவரை போல - அயிரை யென்னும் நெடிய மலையைப் போல ; நீ வாழும் நாள் தொலையாதாக - நீ வாழும் வாழ்நாள் குறையாது பெருகுமாக எ - று. மாடு, பொன். அவ்வுலகினையுடைய தேவரை “மாடோர்” என்றார். மண்ணுலகத்தேயன்றிப் பொன்னுலகத்தவரும் கேட்குமாறு முழங்குகின்ற தென்றற்கு, “உலகமும் கேட்ப” என்றார். அருவியின் நீரொழுக்கு இழுமெனும் அனுகரண வோசையும், கீழே வீழ்ந்தவழிப் பறைபோன்ற முழக்கு முடைமையின், “இழுமென விழிதரும் பறைக்குர லருவி” யென்றார் ; “இழுமென இழிதரும் அருவி” (முருகு. 316) என்றும், “பறையிசை யருவி” (புறம் . 125) என்றும் சான்றோர் கூறுதல் காண்க . இச் சிறப்புப்பற்றி, இதற்குப் பறைக்குர லருவியென்று பெயராயிற்றென வறிக . அயிரை, மேற்குமலைத் தொடரிலுள்ளதொரு மலை ; இதிற் பிறக்கும் அயிரையாறு மேலைக்கடலில் விழுகிறது. அருவி துவன்றும் அயிரை நெடுவரை தொலையாது நிலைபெறுவதுபோல நீ வாழும் நாள் தொலையாதாக என வாழ்த்தியவாறு ; இவ்வாறே பிறரும், “கடவுள் அயிரையின் நிலைஇக், கேடிலவாக பெரும நின்புகழே” (பதிற். 79) என்று வாழ்த்துதல் காண்க. இதுகாறும் கூறியது; “வயவர் பெரும, புரையோள் கணவ, பூண்கிளர் மார்ப, வெல்போ ரண்ணல், வேள்வியிற் கடவுள் அருத்தினை ; கேள்வியின் உயர்நிலை யுலகத்து ஐயர் இன்புறுத் தினை ; ஆதலின்கோடு தொறும் அருவி துவன்றும் நெடுவரைபோல, நீ வாழும் நாள் தொலையாதாக’ என வினைமுடிவு செய்க. “இதனாற் சொல்லியது : அவன் வென்றி கூறிய திறத்தானே அவற்குள்ள சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று”. ஏழாம் பத்து மூலமும் உரையும் முற்றும் |