1 - 8. அறா அ..............................உடற்றியோரே. உரை : அறாஅ யாணர் அகன்கண் செறுவின் - நீங்காத புதுவருவாயினையுடைய அகன்ற இடம் பொருந்திய வயலிடத்தே ; அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து - நிறைந்த பூக்களாகிய ஆம்பலையும் நெய்தலையும் நெல்லுடனே அறுத்து ; செறு வினை மகளிர் - தொகுப்பதாகிய அறுவடைத்தொழில் செய்யும் உழவர் மகளிர் ; மெலிந்த வெக்கை - நெருங்கியுள்ள நெற்களத்தின் கண் ; பரூஉப் பகடு உதிர்த்த - பருத்த எருமைகள் கடா விடப்படுதலால் மிதித்துதிர்த்த ; மென் செந்நெல்லின் - மெல்லிய செந்நெல்லின் கண் ; அம்பண வளவை உறை குவித்தாங்கு - மரக்கால்களை அளத்தற்காக நெற்குவையில் செருகி வைத்ததுபோல ; கடுந் தேறு உறுகிளை - கடிதாகக் கொட்டி வருத்தும் மிகுதியான குளவிகள் ; மொசிந்தன துஞ்சும் செழுங்கூடு - தம்மில் நெருங்கிக் கூடியிருந்து உறங்கும் செழுமையான கூட்டினை ; கிளைத்த - கலைத்த ; இளந்துணை மகாஅரின் - இளஞ்சிறார்கள் போல ; பெரும - பெருமானே ; நின் உடற்றியோர் - நின்னொடு பொரக் கருதி மாறுபட்டோர் ; அலந்தனர் - அலமந்து வருந்தலுற்றனர் எ - று. குளவியினம் தம்மிற் கூடித் தொக்கியிருக்கும் கூடு, நெற்குவைக்கும், குளவி, உறை குவித்துக்கிடந்த அம்பணவளவைக்கும், அக் கூட்டைக் கலைத்துவிட இளந்துணைச் சிறார்கள், அவை கொட்டு மென்று, அஞ்சி மூலைக்கொருவராய்ச் சிதறி யோடுதல், சேரமானைப் பகைத்துப் பொருதவர் கெட்டு அலமருதற்கும் உவமமாயின. யாணர், புதுமை ; ஈண்டுப் புதுவருவாய்மேற்று. ஆர் வீ எனற்பாலது அரு வி யென நின்றது ; ஆர்தல், நிறைதல். ஆர்ந்தென்பது அருந்தென நிற்பது (கலி. 22) போல, ஆர் வீ அரு வீ யெனத் திரிந்து பின் அருவி யெனக் குறுகிற்று. அருவி யாம்பல் என்பதற்குப் பழையவுரைகாரர் நீரின் ஆம்பல் என்று பொருள்கூறி, “என்றதனாற் பயன் நீர்க்குறைவற்ற ஆம்பல் என்பதாம்” என்றும், “எண்ணின் ஆம்பலை நீக்குதற் கென்பதுமொன்று” என்றும் கூறுவர். ஒடு, எண்ணொடு அரிந்தெனவே, நெல்லுடனே அரிதல் பெற்றாம். அரிந்த நெற்சூட்டைக் களத்தே சேர்த்துக் கடாவிட்டுத் தூற்றி நெற்பயன் பெறுபவாதலின், “பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்” என்றார். வெக்கை, நெற்களம். அரிந்து மலிந்த வெக்கை யென முடிக்க. செறுவினை மகளிர் என்புழி நெல்லரிந்து தொகுத்தலாகிய வினை ஈண்டுச் செறுவினை யெனப்பட்டது. மகளிர் அறிந்து மலிந்திருக்குமிடம் வெக்கையாதல் பற்றி, மலிந்த வெக்கை யென்றார். பழையவுரைகாரர், “அரிந்து பகடுதிர்த்த எனக்கூட்டிப் பகட்டானென உருபு விரிக்க” என்பர். செறிவளை மகளிர் என்று பாடங்கொண்டு, “உழவர் பெண்மக்கள் விளையாடுதற்கு வயலிற் பயிர் கொள்ளாததோ ரிடமின்மையின் ஆண்டு அவர்கள் மிக்க களம், செறிவளை மகளிர் மலிந்த வெக்கையாயிற்” றென்பர். செறுவினை மகளி ரென்றே |