39

தெரித்தற்குப்    “புனல்மலி   பேரியாற்றை” யெத்தோதுவதும், மகளிர்
நடுவண்  விளங்கும்  வீற்றினை,  “மாகஞ்  சுடர  மாவிசும்  புகக்கும்,
ஞாயிறுபோல   விளங்குதி”   யென்பதும்,  அவனை  வாழ்த்துங்கால்.
“நின்னாள்  திங்கள்  அனைய  வாக, திங்கள் யாண்டோ ரனையவாக,
யாண்டே,  ஊழி  யனையவாக  வூழி,  வெள்ள  வரம்பினவாக” என
வாழ்த்துவதும்,  “ஈரமுடைமையின் நீரோரனையை,  அளப்பருமையின்
இரு  விசும்பனையை,  கொளக்  குறைபடாமையின்  முந்நீ ரனையை”
யெனப்  பாராட்டுவதும்  பிறவும்  கற்பார்க்குக்  கழிபே ரின்பம் தரும்
கட்டுரைநலம் வாய்ந்தனவாகும்.