குவித்தல் என்றுகொண்டு அளவையின் உறையிட்ட வாயிடத்தே குவிக்கப்படுவதுபோல நிலத்தே குவித்துவைத்தல் என்று உரைத்தலுமொன்று. அது பொருளாயின், உறையாகக் குவித்த நெல்லினைச் செழுங் கூட்டிற்கு உவமமாகக் கொள்க. இதனாற் கூறியது : மகளிர் மலிந்த வெக்கைக்கண் தொகுத்த நெல்லினிடத்தே அம்பண வளவை உறைகுவித் தாங்கு, கடுந்தேற்றுறுகிளை துஞ்சும் கூடு கிளைத்த மகாஅரின், நின் உடற்றியோர் அலந்தனர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. 9 - 13. ஊரெரி ........... வௌவினை. உரை : போர் சுடு எரி ஊர் கவர - போரின் கண்ணே சுடுதற்காக எடுத்த தீயானது பகைவர் ஊர்களைக் கவர்ந்துண்டலால் ; கமழ் புகை - சுடுநாற்றம் நாறுகின்ற புகை ; உருத்தெழுந்து உரைஇ - மிக்கெழுந்து பரந்து ; மாதிரம் மறைப்ப - திசைகளை மறைக்க ; தோன்றல் ஈயாது - வெளித் தோன்றாமல் ; மதில்வாய் மதிற்குள்ளேயிருந்து ; தம் பழி ஊக்குநர் - தம் குற்றத்தால் பழி செய்துகொள்ளும் பகைவருடைய ; குண்டுகண் அகழிய - ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும் ; குறுந்தாள் ஞாயில் - குறுகிய படிகளையுடைய ஞாயிலையுமுடைய ; ஆர் எயில் தோட்டி வௌவினை - கடத்தற்கரிய மதிற்காவலை யழித்துக் கவர்ந்து கொண்டனை, யாதலால் எ - று. போருடற்றுவோர் பகைப்புலத்தே தீ வைத்தல் முறையாகலின், போர்சுடு எரி என்றார். இதனை எரிபரந்தெடுத்த லென்றும். உழபுல வஞ்சியென்றும் ஆசிரியன்மார் கூறுப. ஊர் முழுதும் எரி பரவுவதால் புகை மிக்கெழுந்து எம்மருங்கும் சூழ்ந்துகொள்ளும் திறத்தை, “உருந்தெழுந்துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப” என்றார். இனி, “எரி உருத்தெழுந்துரைஇ ஊர் கவர” என்று இயைப்பினுமமையும். பழையவுரைகாரரும், “உருத்தெழுந் துரைஇ ஊர் எரி கவர எனக் கூட்டுக” என்றல் காண்க. பகைவர் ஊரிடத்தே நீ எடுத்த தீயானது அவ்வூர்களைக் கவர்ந்துண்ண, அதனால் எழுந்த பெரும்புகை மாதிரம் மறைக்க, நீ அப்பகைவருடைய எயிலை வௌவினை யென்றார், “ஆரெயில் தோட்டி வௌவினை” யென்றார் ; “நீயுடன்றோர் மன்னெயில் தோட்டி வையா” (பதிற். 25) என்று பிறரும் கூறுதல் காண்க. பகைவர், புறமதிலைச் சூழ்ந்துகொண்டவழி, அஞ்சாது வெளிப்போந்து அவரைப் பொருதழித்து வேறலோ, அப்போரிடைப்பட்டு வீழ்தலோ இரண்டி லொன்றைச் செய்யாது அகமதிற்கண் அடைபட்டு மடிந்திருத்தலால் பெரும்பழியே விளையுமாதலின், “மதில்வாய்த் தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்” என்றார். தோன்றா லீயா தென்பது தோன்றாமலென்னும் பொருட்டு பழையவுரைகாரரும் “தோன்ற லீயா தென்றது, தோன்றா தென்றும் வினையெச்சத் திரிசொல்” என்றும், “தோன்றா லீயாமலெனத் திரிக்க” என்றும் கூறுவர். |