ஞாயில், மதிலின் அகத்தே புறத்தோர் அறியாவகை யிருந்து அம்பு தொடுக்கும் முக்கோண வறை. இதனை ஏப்புழை ஞாயிலென்பர். மதிற்றலையில் மேலிடத்தே சிறுசிறு படிகளையுடைத்தா யிருத்தல்பற்று, இதனைக் “குறுந்தாள் ஞாயில்” என்றார். விற்பொறி யிருந்து எந்திரத்தால் அம்பு சொரிய அதற்கு இடனாகிய ஞாயிலைத் தாளுடையது போலக் கூறும் சிறப்புப்பற்றி, குறுந்தாள்ஞாயி லென்று இப் பாட்டிற்குப் பெயராயிற்று. “குறுந்தாள் ஞாயிலென்றது, இடையிடையே மதிலின் அடியிடங்களைப் பார்க்க அவற்றிற் குறுகிக்குறுகி யிருக்கும் படியையுடைய ஞாயிலென்றவாறு” என்றும், “இவ்வாறு கூறிய சாதிப் பண்பானும், படியைத் தாளென்று கூறினபடியானும் இதற்குக் குறுந்தாண் ஞாயில் என்று பெயராயிற்றென்றும், “வௌவினை யென்றது விளையெச்சமுற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர். 13 - 24. ஏறொடு.................ஊழி. உரை : ஆன்பயம் வாழ்நர் - ஆன்பயன் கொண்டு வாழும் இடையர்கள் ; ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇ - ஏறுகளுடன் கன்றுகளையுடைய ஆனிரைகளைக் கொணர்ந்து தருதலால் ; புலவுவில் இளையர் - புலால் நாறும் வில்லேந்திய வெட்சியாராகிய நின்வீரர் ; புகல் சிறந்து - அவர் பால் விருப்பம் மிக்கு ; அங்கை விடுப்ப - தாம் கைப்பற்றிய ஆனிரைகளையும் விட்டொழிய ; மத்துக் கயிறு ஆடா வைகற்பொழுது - தயிர் கடையும் மத்தினிடத்தே கயிறாடாத விடியற்போதின்கண் ; நினையூஉ நின்னைப் புகலடைய நினைந்து போந்து ; கழுவுள் தலை மடங்க கழுவுளென்னும் இடையர் தலைவன் தலைவணங்கி நின்றதனால் ; பதி பாழாக வேறு புலம் படர்ந்து - ஊர்கள் பலவும் பாழ்படும்படியாகப் பகைவர் நாடு நோக்கிச் சென்று ; விருந்தின் வாழ்க்கையொடு - புதுவருவாய்கொண்டு இனிது வாழ்தற்கேதுவாகிய செல்வத்தோடு ; பெருந் திரு அற்றென - தம் முன்னோர் ஈட்டி வைத்த பெருஞ்செல்வமும் இனிக்கெட்டதென்றெண்ணி ; அருஞ்சமத்து அருநிலை தாங்கிய - கடத்தற்கரிய போரின்கண் தடுத்தற்கரிய போர்நிலையைத் தடுத்துச் சிறந்த ; புகர் நுதல் பெருங் களிற்று யானையொடு - புள்ளி பொருந்திய நெற்றியினையுடைய பெரிய களிற்றியானைகளையும் ; அருங்கலம் தரா அர் பெரிய அணிகலன்களையும் திறையாகச் செலுத்தாத பகைவேந்தர் ; மெய் பனி கூரா - உடல்நடுக்கம் மிகுந்து ; அணங்கெனப் பராவலின் - வருத்தக்கூடிய தெய்வமென நின்னை நினைந்து பரவுவதால் ; பலிகொண்டு பெயரும் பாசம்போல - தன்னால் தாக்குண்டார் உயிரைக் கொள்ளாது அவர் இட்ட பலியினைக் கொண்டு நீங்கும் பேய் போல ; திறைகொண்டு பெயர்தி - அவர் இடும்திறைகளைக் கொண்டு அவர் உயிரை யளித்துவிட்டுத் திரும்பி ஏகுகின்றாய் ; நின் ஊழி வாழ்க - |