பக்கம் எண் :

392

நினக்குத்   தெய்வத்தால்   வரையறுக்கப்பட்ட   வாழ்நாள்  முழுதும்
இனிது வாழ்வாயாக எ - று.

கழுவுள்     என்பவன், ஆயர் தலைவனாய்  ஏனை வேந்தருடன்
பெரும்பகை   கொண்டிருந்தான்  ;  அதனால்   அவனைப்  பிறரும்,
“பொரு   முரணெய்திய   கழுவுள்”   (பதிற்.  88)  என்றல்  காண்க.
அவனிருந்த  நகரை  முற்றி,  அவனுடைய  ஆரெயில் தோட்டியை நீ
வௌவிக்கொண்டமையின், அவன் அடைமதிற்பட்டுக் கிடப்ப, அவன்
கீழ்   வாழ்ந்த   இடையர்கள்   வேறு   புகல்காணாது   தம்முடைய
ஆனிரைகளைத்  தாமே கொணர்ந்து தந்து அருள் வேண்டி நின்றமை
தோன்ற,  “ஆன்பயம்  வாழ்நர்  ஏறொடு  கன்றுடை  ஆயம்  தரீஇ”
என்றார்.   ஆனிரையான்   வரும்  பாற்பயன்கொண்டு  உயிர்வாழும்
இயல்பினராயினும்,  அவற்றைத்  தந்தேனும் நின் அருணிழல் வாழ்வு
பெறுதல்  வேண்டுமென  நினைந்தன ரென்பார், “ஆன்பயம் வாழ்நர்”
என்றும்  கூறினார்.  தம் உயிர்கொடுத்து அருள் வேண்டினர் என்பது
கருத்து  .  அதுகண்ட  நின்  வீரர்  தாம்  முன்பே போந்து வெட்சி
நெறியிற்   கைப்பற்றிய   அவர்   தம்   ஆனிரைகளை   அருளால்
வழங்கினமையின், “புகல் சிறந்து அங்கை விடுப்ப” என்றார்.  பகைவர்
தாம் உயிர்வாழ்தற் கேதுவாயவற்றைத் தாமே தந்து புறங்காட்டுதலினும்
சீரிய  வெற்றியின்மையின்,  “புகல்  சிறந்”  தென்றார்  .  இவ் வாயர்
முதற்கண்   தாம்   ஆளும்   ஆண்மையும்  உள்ளளவும்  பொருது
நின்றமை தோன்ற, வில்லேந்திய வீரர் சிறப்பை, “புலவு வில்லிளையர்”
என்றார்  .  பெருந்திரளான  மக்களைக்  கொன்றதனால்  வில்லேந்தி
அம்பு  தொடுக்கும் கைகள், குருதி தோய்ந்து புலவு நாறுதல் ஒருதலை
.  அம்பு தொடுத்து ஆயர்களைக் கொல்லாது அருள் செய்யும் சிறப்பு
நோக்கி,   “அங்கை”   யென்றார்   .  பகைத்துப்  பொருதார்  மேல்
கண்ணோடாது   அம்பு   செலுத்தும்  நெறிக்கு  இளமை  மேம்பட்டு
நிற்பினும்,  அஃது  அருளுடைமையால்  சால்புற்றிருந்தமை  விளங்க,
“இளையர்” என்றார்.

தன்    வீரராகிய ஆயர்களைப் பொருவது விட்டு ஆனிரைகளைத்
தந்து   நின்   அருள்   வாழ்வு   வேண்டியதறிந்த  கழுவுள்,  தான்
அவர்கட்குத்   தலைவனாகியும்   தலைமைப்   பணியினை  யாற்றும்
வலியின்மையால்   நாணிப்   பகற்போதிற்   போந்து   புகலடையாது
வைகறைக்கண்  வருதலை  நினைந்தா  னென்பார், “மத்துக் கயிறாடா
வைகற்  பொழுது நினையூஉ” என்றார் . வைகறைப்போதில் ஆய்மகள்
எழுந்து  தயிர்  கடைந்துகொண்டு, ஞாயிற்றின் வெயில் மிகுமுன் மாறி
வரவேண்டி   யிருத்தலின்,   வைகறை  யாமத்தின்  இறுதிக்காலத்தை
“மத்துக்கயி   றாடா   வைகற்  பொழுது”  என்றார்.  அக்  காலத்தே
இயங்குவோர்  உருவம்  ஓரளவு  இனிது தெரியும். பகற்போது வரற்கு
நாணமும்,  இருட்  போது வரின் காவலர் கொல்வரென்னும் அச்சமும்
வருத்துதலால்,    வைகறைப்பொழுது    கொள்ளப்பட்டது.   நினைவு
பிறந்தவழி,  செய்கை  பயனாதல்பற்றி, “நினையூஉ” என்றார். கழுவுள்
என்பான்  தன்  பெருமுரணழிந்து மானத்தால் தலை வணங்கி நிற்பது
வீரமாகாமையின்,   “தலை  மடங்க”  என்றார்.  வணங்கியது  கண்ட
துணையே,  அவன்பாற்  கொண்ட  பகைமை  நின்னுள்ளத்தினின்றும்
நீங்குதலின்,  வேறு  புலம்  நினைந்து  செல்குவையாயினை என்பார்,
“வேறு  புலம்  படர்ந்து”  என்றும், அச் செலவால் பகைவர் ஊர்கள்
அழிவது   ஒருதலை  யாதலின்,  “பதி  பாழாக”  என்றும்  கூறினார்.
படர்ந்து திறைகொண்டு பெயர்தி என வினைமுடிவு செய்க.