பக்கம் எண் :

393

“வௌவினை யென்றது, வினையெச்சமுற்று. ஆயம் தரீஇ யென்றது
ஆயங்களை  நீ  புலவுவில்  இளையர்க்குக்  கொடுப்ப எ - று. தரீஇ
யென்பதனைத்   தர  வெனத்  திரிக்க.  இளையர்  அங்கை  விடுப்ப
என்றது,  இளையர்  அவ்  வாயத்தைத்  தங்கள்   அங்கையினின்றும்
பிறர்க்கு  விடுப்ப எ - று . கயிறாடா வென்னும் பெயரெச்ச மறையை
வைகலென்னும்  தொழிற்  பெயரொடு  முடிக்க.   வைகல்  - கழிதல்.
வைகற்பொழுது  ;  இருபெயரொட்டு.  வாழ்நர்  வாழ்பவர்,  இடையர்
பயத்தானென விரிக்க. கழுவுளாவான், அவ்விடையர்க்குத் தலைவனாய்
அக்   காலத்துக்   குறும்பு   செய்திருந்  தானொருவன்  .  முன்னர்
எயிலென்றது,  அவன்  தனக்கு அரணாகக் கொண்டிருந்த மதிலினை,
வேறு    புலம்    பதி    பாழாகப்   படர்ந்தென்றது,   அக்கழுவுள்
தலைமடங்குகையாலே  அவனை  விட்டு, வேறு திறையிடாக் குறும்பர்
நாட்டிலே  அந்நாட்டுப்  பதி  பாழாகச்  சென்று  எ  -  று. படர்ந்து
திறைகொண்டு  பெயர்தி  யெனக்  கூட்டுக”  என்று பழையவுரைகாரர்
கூறுவர்.

இனி,    பகைவர் களிறும் கலனும் திறையாகத் தாரா தொழிந்ததற்
கேதுவாகிய   அவருடைய   பெருஞ்செல்வ   நிலையை,  “விருந்தின்
வாழ்க்கை  யொடு  பெருந்திரு”  என்றார் . விருந்து, ஈண்டுப் புதிதாக
ஈட்டப் பெறும் செல்வத்தின் மேற்று ; அச் செல்வத்தின் பயன்  இன்ப
வாழ்க்கை  யென்ப  . பெருந் திரு, முன்னோர் ஈட்டிவைத்துச்  சென்ற
பெருஞ்  செல்வம்  ;  “பெருஞ் செல்வம்” (குறள். 1000) என்பதற்குப்
பரிமேலழகரும்  இவ்வாறு  கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர்,
விருந்தின்   வாழ்க்கை   யாவது   “நாடோறும்  புதிதாகத்  தாங்கள்
தேடுகின்ற  பொருள்”  என்றும், “பெருந்திரு, முன்னே தேடிக் கிடந்த
பொருள்” என்றும் கூறுவர்.

பதி  பாழாக வேறு புலமாகிய தம் நாடு நோக்கி நீ வருவது கண்ட
நின்  பகைவர்தம்  வாழ்க்கையும்  திருவும் அழிந்தன வென்று கருதி
உளமும்   உடலும்   ஒருங்கு   நடுங்கின   ரென்பார்,   “விருந்தின்
வாழ்க்கையொடு  பெருந்திரு  அற்றென  மெய்பனி  கூரா”  என்றார்,
பழையவுரைகாரர்,    “அற்றென   வென்றது,   அற்றதெனக்   கருதி
யென்றவாறு”  என்றும், “அற்ற தென்பது கடைக் குறைந்த” தென்றும்
கூறுவர்.

அருஞ்     சமத்து அருநிலை யென்றது, கடும்போர் நிகழுமிடத்து
வெல்லுதல்  அரிதென்னுமாறு  இருதிறத்து  வீரரும் மண்டிப் பொரும்
நிலைமையாகும்.  அந்  நிலைமைக்கண்  அஞ்சாது  நின்ற  பகைவர்
முன்னேறாவாறு   தகைந்து  வெல்லும்  போர்த்தகுதி  பெற்ற  களிறு
என்றற்கு இவ்வாறு சிறப்பித்தார் என அறிக. திறைசெலுத்தும் வேந்தர்
இத்தகைய     களிறுகளையும்     உயரிய     அணிகலன்களையும்
தருவரென்பதனை,  “ஒளிறுவாள்  வயவேந்தர்,  களிறொடு கலந்தந்து,
தொன்று  மொழிந்து  தொழில்  கேட்ப”  (பதிற்.  90) என்று பிறரும்
கூறுமாற்றானறிக  .  அருங்கலந் தாராத பகைவ ரென்னாது “தராஅர்”
எனத்  தொழில்மேல் வைத்தோதியது . தாராமைக் கேதுவாய பகைமை
நீங்கித்  தருதற்  கேதுவாகிய அச்சமுண்மை புலப்படுத்தற்கு, பகைவர்
தம்முடைய    ஆண்மை,    அறிவு,    பொருள்,   படை  முதலிய
வலிவகையைக்  கடந்து  மேம்பட்டு  நிற்றல்பற்றி  நின்னைத்  தாக்கி
வருத்தும்  அணங்கெனக்  கருதினா ரென்றும், அணங்கொடு பொருது
வேறல்    மக்கட்   கரிதாதலின்,   அவர்   செயற்பாலது  வழிபாடு
ஒன்றேயன்றிப் பிறிதில்லை யாதலின் “பராவலின்” என்றும் கூறினார்.