“பலிகொண்டு பெயரும் பாசம்” எனவே உயிர் கொள்ளாது விடுத்தேகுவது பெற்றாம் . பாசம், பேய், பேயை உவமங் கூறியதுபோல, திருத்தக்க தேவரும் சீவகனை, “பெண்ணலங் காதலிற் பேயு மாயினான்” (சீவக. 2010) என்று கூறுதல் காண்க. 25 - 27. உரவரும்.....................வாழுமோரே. உரை : உரவரும் மடவரும் அறிவு தெரிந் தெண்ணி - அறிவுடையோர் அறிவுநலத்தையும் மடவோரது அறியாமையினையும் ஆராய்ந்து செய்வதும் தவிர்வதும் நினைந்து ; அறிந்தனை அருளாயாயின் - அவரவர் தகுதியறிந்து அருளா தொழிகுவையாயின் ; நெடுந்தகை - நெடிய தகுதியுடையோனே ; இவண் வாழுமோர் யார் - இவ்வுலகில் வாழ்வோர் இலராவர் எ - று. அறிவு தெரிந்தெனவே, அறியாமையும் தெரிந்தவாறு பெறப்படுதலின், அதனையும் பெய்துகொண்டு இருதிறத்தார்க்கு முறையே கூட்டி உரை கூறப்பட்டது. உரம், அறிவின் திண்மை. உரவோர் அறிவுநலம் தேர்ந்து அவரைத் தழீஇக்கோடல் வேந்தர்க்குக் கடனாதலாலும், மடவோர் சிற்றினத்தா ராதலின், அவரோடு சேராமை வேண்டுதலாலும். இரு திறத்தார்க்கும் செய்வதும் தவிர்வதும் அறியவேண்டுவனவாயின. உரவோர் புரியும் அறிவுடைச்செயல்கண்டு அருளலும், மடவோர் செய்யும் அறிவில்செயல்கண்டு ஒறுத்தலும் அரசுமுறை யாதலால், “அறிந்தனை அருளாய்” என்றும், அருளாதொழியின், உரவோர் தேயச் சிற்றினம் பல்கித் துன்பமே மிகுவித்து உயிர்வாழ்க்கையை இன்னற்படுத்தும் என்றற்கு, “யாரிவண் வாழுமோர்” என்றும், இதனை யறிந்தாற்றும் சிறப்புக் குறித்து “நெடுந்தகை” யென்றும் கூறினார். சேரமானொடு பொருது உடற்றி அலந்த பகைவரை மடவரென்றும், அணங்கெனப் பராவித் திறை செலுத்தியோரை உரவரென்றும் குறித்துரைத்தலின், இஃது ஓராற்றால் விரிந்தது தொகுத்து அவன் வென்றிச் சிறப்புரைத்தவாறு மாயிற்று. இனிப் பழையவுரைகாரர், “உரவரையும் மடவரையும் என்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது ; அறிவு, அவர்களறிவு ; வாழுமோர் என்புழி உம்மை அசைநிலை” என்பர். வாழுமோர் என்பது “உணருமோர்” என்பதுபோலும் தனிச்சொல்லாதலின், உம்மை எதிர்காலப் பொருட்டாயதோர் இடைச்சொல் லெனவுமாம். இதுகாறும் கூறியது ; பெரும, நின் உடற்றியோர், கடுந்தேறு உறுகிளை துஞ்சும் செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின் அலந்தனர் ; உருத்தெழுந்து உரைஇய எரிஊர் கவர, புகை மாதிரம் மறைப்ப, ஆரெயில் தோட்டி வௌவினை ; அதுகண்ட ஆன்பயம் வாழ்நர் அஞ்சி ஏறொடு கன்றுடை ஆயம் தந்தாராக, நின் இளையர் புகல் சிறந்து அங்கை விடுப்ப, அவர் தலைவனான கழுவுள் நாணி, வைகற் பொழுதிற் போந்து தலைமடங்கி நின்றானாக, நீ வேறு புலம் படர்ந்து சென்று, தராராய பகைவர் பராவலின், அவர் தந்த திறைகொண்டு பெயர்தி ; நின்னூழி வாழ்க ; இவ்வாறு உரவரு மடவரும் அறிவு தெரிந்தெண்ணி அருளாயாயின், நெடுந்தகை, இவண் வாழுமோர் யார் ? ஒருவரு மிலராவர் எனக் கூட்டி வினை முடிவு செய்க. |